அர்த்தமுள்ள உற்பத்தி வாய்ப்பு வளைவுக்கோடு
பொருளியலில் அறிய வேண்டிய முக்கிய கருத்துகளுள் ஒன்று, ‘உற்பத்தி வாய்ப்பு வளைகோடு’ (- Production Possibility Curve)ஆகும். நமது நேரம், உழைப்பு உள்ளிட்ட வளங்களை உச்சபட்சமாக பயன்படுத்தும் போது, நம்முடைய அதிகபட்ச உற்பத்தி என்ன என்பதை இது காட்டும். வழக்கமாக, இரண்டு பொருட்களை ஒப்பிட்டு இது கண்டறியப்படுகிறது. இதை எளிமையான உதாரணம் மூலம் புரிந்துகொள்ளலாம்.
இப்போது நீங்கள் காட்டில் வாழும் வேட்டைக்காரன் என்று கற்பனையாக வைத்துக்கொள்வோம். உங்களுக்கு முயலை வேட்டையாடவும், மாம்பழங்களை சேகரிக்கவும் என இரண்டு வேலைகள் தெரியும்; இப்போது, எந்த வேலைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினால், அதிக முயல் மற்றும் மாம்பழத்தை பெறலாம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அப்படியென்றால், அதற்கான சாத்தியக்கூறுகளை இப்படி எழுதிக்கொள்ளலாம்.
அ) நேரத்தை வீணாக்காமல், முயலை பிடிப்பதிலேயே ஒரு நாள் முழுவதும் மெனக்கெட்டால், உங்களால் அதிகபட்சம் ஐந்து முயல்களை பிடிக்க முடியும். ஆனால், அந்த நாளில் மாம்பழங்கம் சேகரிக்க நேரம் ஒதுக்காததால், உங்களுக்கு மாம்பழம் கிடைக்காது அல்லவா? எனவே, உங்களுக்கு கிடைக்கும் மாம்பழங்களின் எண்ணிக்கை 0.
ஆ) அதே, நான்கு முயல்களை பிடித்துவிட்டு, மீதமுள்ள நேரத்தில் மாம்பழங்களை சேகரித்தால், 100 மாம்பழங்கள் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
இ) மூன்று முயல்கள் பிடித்துவிட்டு, மற்ற நேரத்தை மாம்பழம் சேகரிக்க செலவழித்தால், உங்களுக்கு கிடைக்கும் மாம்பழங்களின் எண்ணிக்கை 180 பழங்கள்.
ஈ) இரண்டு முயல்களை பிடித்துவிட்டு, மிச்ச நேரத்தில் பழங்கள் சேகரித்தால், 240 மாம்பழங்கள் சராசரியாக கிடைக்கிறது என்றும்
உ) ஒரு முயல் பிடித்துவிட்டு, மீதி நேரத்தில் பழங்கள் சேகரித்தால், சராசரியாக 280 பழங்கள் கிடைக்கிறது என்றும்
ஊ) முயலே பிடிக்காமல், மாம்பழங்களை சேகரித்தால் சராசரியாக 330 பழங்கள் கிடைக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம்.
மேற்சொன்ன தரவுகளை இப்போது பட்டியலாக எழுதுங்கள்
வாய்ப்பு முயல் மாம்பழம்
அ) 5 , 0
ஆ) 4, 100
இ) 3, 180
ஈ) 2, 240
உ)
ஊ) 0, 330
இப்போது பட்டியலில் உள்ளதை வரைபடமாக குறியுங்கள். OX அச்சை ,முயல் அச்சு என்றும், OY அச்சை, மாம்பழ அச்சு என்று வைத்துக்கொள்வோம்.
இப்போது படத்தில் உள்ள புள்ளிகளை பாருங்கள். இதுதான், உற்பத்தி வாய்ப்பு வளைகோடாகும். இதில் உள்ள ஒவ்வொரு புள்ளியும், நமக்கிருக்கும் திறன்மிக்க உற்பத்தி வாய்ப்புகளை காட்டுகின்றன. நாம் குறித்த 6 புள்ளிகள் மட்டுமின்றி, வேறு எந்த புள்ளிகள் அந்த வளைவு கோட்டை தொட்டாலும், அதுவே உச்சபட்ச உற்பத்தி ஆகும்.
திறனற்ற உற்பத்தி
அதேசமயம், உற்பத்தி வளைவு கோட்டுக்குள், ஏதேனும் உள்ள புள்ளியின் எண்ணிக்கையில், உங்களுக்கு முயலும் மாம்பழமும் கிடைக்குமா? கிடைக்கும். ஆனால், அந்த உற்பத்தி முழுத்திறன் உடையது அல்ல. உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒரு நாளில் 1 முயல், 200 பழங்கள் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, அதை வரைபடத்தில் குறிக்கவும். (பார்க்க படம் 1) . கவனித்து பார்த்தால், அது வளைவுக்கோட்டை தொடாமல், வளைவுகோட்டுக்குள்ளேயே இருப்பது தெரியும். உங்கள் உற்பத்தி வளைவுகோட்டை தொடாமல் இருப்பதன் மூலம், உங்களுடைய முழுத்திறன் அல்லது முழுஉழைப்பை செலுத்தவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.
சரி, வளைவுகோட்டுக்கு அப்பால் உற்பத்தி சாத்தியமா? வாய்ப்பே இல்லை. ஏனெனில், வளைவுகோடுதான் உங்கள் அதிகபட்ச உற்பத்திக்கான வாய்ப்பு. அதைத்தாண்டி, எந்த புள்ளியிலும் உற்பத்தி சாத்தியம் இல்லை.
இந்த வரைகோட்டின் சிறப்பம்சம், சென்ற வாரங்களில் நாம் பார்த்த பற்றாக்குறை, தெரிவு, வாய்ப்பு செலவு, உற்பத்தி திறன் போன்ற விஷயங்களை உள்ளடக்கியிருப்பதே.
பற்றாக்குறை
- மாம்பழம், முயல் மட்டுமல்ல, அதை சேகரிக்க தேவையான நேரம், மனித உழைப்பு போன்றவையும் இங்கே பற்றாக்குறையாக உள்ளதை கவனிக்கவும்
தெரிவு
உங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மாம்பழமும் வேண்டும், முயலும் வேண்டும். ஆனால், உங்களுக்கு இருக்கு நேரப்பற்றாக்குறையால், நீங்கள் எது மிக அவசியமோ அதைத்தேர்வு செய்து, அதற்காக உழைப்பீர்கள்.
வாய்ப்பு செலவு
உங்களுக்கு முன் இரண்டு வாய்ப்புகள். ஒரு நாள் முழுக்க முயற்சித்தால், 5 முயல்கள் அல்லது 330 மாம்பழங்கள் கிடைக்கும். 5 முயலை தெரிவு செய்தால், அதற்கான வாய்ப்பு செலவு 330 மாம்பழங்கள். 4 முயல்களை தேர்வு செய்தால், உங்களுக்கான வாய்ப்பு செலவு 230 மாம்பழங்கள். 330 மாம்பழங்களை தேர்வு செய்தால், உங்களுக்கான வாய்ப்பு செலவு 5 முயல்கள்.
என்ன எளிமையாக புரிகிறதா? இனி, வளைவுக்கோட்டை கண்டு அஞ்சத் தேவையில்லைதானே?! இதுபோன்ற உதாரணங்களை நீங்களாகவே இயற்றி, வாய்ப்பு செலவை கணக்கிட்டு பாருங்கள்.
-ரோஷன் செல்வரத்தினம். பொருளியல் ஆய்வாளர்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••



Comments
Post a Comment