பொருளாதார வளர்ச்சியும் ‘பாப்புலிசம்’ ஆபத்தும்



இ ன்றைய காலத்தில், ‘பாப்புலிசம்’ (Populism) எனும் கருத்து, பொருளியலில் முக்கிய தாக்கத்தைச் செலுத்துகிறது. இதை அறிந்துகொள்ளலாம் வாருங்கள். ‘அனைவரும் துன்பங்களை பொறுத்துக்கொண்டு ஒற்றுமையாக உழைத்தால், 10 ஆண்டுகளில் பெரும் சாதனையைச் செய்துவிடலாம்’ என்று பிரசாரம் செய்கிறார் கார்த்திக் என்ற அரசியல்வாதி. மறுபுறம், சுப்ரமணி என்ற அரசியல்வாதி, ‘கறுப்புப் பணத்தை ஒழிப்பேன்; வெறும் ஆறே மாதத்தில் அனைவரின் சம்பளத்தையும் இரண்டு மடங்காக உயர்த்துவேன். 50 சதவீதம் வரியைக் குறைப்பேன்‘ என்று பிரசாரம் செய்கிறார். இவர்களில் யார் அதிகம் ஓட்டுகளை வாங்குவார்கள்? சந்தேகமே இல்லாமல் சுப்ரமணி தான். இதை ‘பாப்புலிசம்’ என்பார்கள்.

பாப்புலிசம் என்றால், பொதுமக்களின் அதிருப்தி, கனவுகள், ரசனைகளுக்கு ஏற்றவாறு பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுவது என்று பொருள். ‘பணக்காரர்கள் தூக்கம் இழக்கப்போகிறார்கள் ; பாட்டாளிகளுக்கு பொற்காலம் வரப்போகிறது’, ‘ஏழைகளுக்கு புதிய இந்தியா’ என்பதெல்லாம் அரசியல்வாதிகள் பேசும் பாப்புலிச வசனங்கள் தான்.

நீண்டகால வளர்ச்சி, எல்லா தரப்பினருக்குமான பட்ஜெட், தொழில்முனைவுப் பெருக்கம் போன்றவற்றை எல்லாம் மக்கள் காதுகொடுத்துக் கேட்பதில்லை. ஊழல் அமைப்பை சீர்திருத்துவோம், சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு கடினமாக உழைப்போம் என்று சொல்லி மக்களை கவர முடிவதைவிட, ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வங்கியில் 15 லட்சம் ரூபாய் போடுவேன், இலவச கலர் ‘டிவி’ தருகிறேன் என்று சொல்லி கவருவது ஈசியான விஷயம். ‘என்னிடம் உடற்பயிற்சி உபகரணத்தை வாங்கினால், 15 நிமிடத்தில் உடல் இளைத்துவிடும்’, ‘இந்தப் புத்தகத்தைப் படித்தால், 10 நாட்களில் பணக்காரனாகி விடலாம்’ என்று சொல்லி, சேல்ஸ்மேன் வாடிக்கையாளரைக் கவர்வது போல்தான் இதுவும். துரதிர்ஷ்டவசமாக இதுபோன்று வாக்குறுதிகளை தரும் அரசியல்வாதிகள்தான், அதிக ஓட்டுகளைப் பெறுகின்றனர். காரணம், மாற்றத்தை எதிர்பார்க்கும் பெரும்பாலான மக்கள், அது ஒரே நாளில் மேஜிக் போன்று நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கனவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் பொருட்டு, பாடுபடத் தயாராக இல்லை.

இது பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமான நடவடிக்கை எதுவோ அதை விட்டுவிட்டு, பொதுமக்களை திருப்திப்படுத்தி அனாவசியமான செலவுகளை அரசு செய்யத் தொடங்கும். மக்களிடம் முறையான விழிப்புணர்வு ஏற்பட்டாலே தவிர, பாப்புலிசத்தின் ஆபத்திலிருந்து பொருளாதாரத் திட்டங்கள் காக்கப்படாது.

இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தப்போவதாக ஒருவர் வாக்குறுதி அளித்தால், அதற்கு பொருளாதாரம் எங்கிருந்து வரும் என்று கேள்வி கேட்க வேண்டும். வரியை பாதி குறைத்துவிட்டால், அரசுக்கு வேறு எந்த வகையில் வருவாய் கிடைக்கும் என்று கேட்க வேண்டும்.

கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்றால், அதற்கான வழி என்ன என்று கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால்தான், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

– ரோஷன் செல்வரத்தினம்

Comments