வளர்ச்சியை அளக்கும் ஜி.டி.பி.,



ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product – -கிராஸ் டொமெஸ்டிக் பிராடக்ட் -) மதிப்புதான், ஜி.டி.பி. ஆகும். ஒரு ஆண்டில் எவ்வளவு மதிப்பிலான சேவை அளிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகி இருக்கின்றன என்பதை மொத்தமாக கூட்டும்போது, கிடைப்பதுதான் ஜி.டி.பி.

எப்படி கணக்கிடப்படுகிறது?

டூத்பேஸ்ட், பிரஷ், டி.வி., பிரின்டர், இயர்போன், ஜாம், பால்கோவா, கார் என்று நாள்தோறும் கோடிக்கணக்கான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் ஒட்டுமொத்த சந்தை விலையையும் கூட்டித்தான், ஜி.டி.பி. கணக்கிடப்படும்.

ஆனால், இடைநிலைப் பொருட்களை (Intermediary Products) அதில் சேர்க்க மாட்டார்கள். உதாரணத்துக்கு ஜாம் டப்பா உற்பத்தி செய்ய, ஆப்பிள், அன்னாசி, சர்க்கரை போன்ற மூலப்பொருட்கள் சேர்க்கப்படும். இந்த மூலப்பொருட்கள் வேறொரு இடத்தில் வாங்கப்பட்டிருந்தாலும், அதை இடைநிலைப் பொருட்களாகக் கருதி, ஜி.டி.பி.யின் மதிப்பில் அவற்றைச் சேர்க்கமாட்டார்கள். மாறாக, ஜாம் டப்பா விற்பனையாகும் போது, இடைநிலைப் பொருட்களும் அந்தக் கணக்கில் அடங்கிவிடும் தானே...

கார் உற்பத்தி செய்வது என்றால், டயர் உட்பட அதன் ஏராளமான உதிரி பாகங்களை வெளியிலிருந்து வாங்க வேண்டும். அந்த உதிரி பாக விற்பனையாளர்களோ, தங்களுக்குத் தேவையான ஸ்டீல் போன்றவற்றை வேறொரு இடத்திலிருந்து வாங்குவார்கள். ஸ்டீல் உற்பத்தியாளர்களோ, அவர்களுக்குத் தேவையான இரும்பை, இரும்புச் சுரங்கத்திலிருந்து வாங்குவார்கள். இவையெல்லாம், கார் என்ற இறுதிப் பொருளைத் தயாரிப்பதற்குப் பயன்படும் இடைநிலைப் பொருட்கள்.

எனவே, இறுதியான நிலையில்தான் இவற்றின் மதிப்பு ஜி.டி.பி.யில் சேர்த்துக் கொள்ளப்படும். இடையிலேயே சேர்த்தால், ஒரே பொருளுக்கு இரண்டு மதிப்புகள் வந்துவிடும். அதேசமயம், ஒரு நபர் தன் பழைய டயரை மாற்ற எண்ணி, புது டயரை வாங்குகிறார் என்றால், அது ஜி.டி.பி.யில் வந்துவிடும். அது இடைநிலைப் பொருளாகக் கருதப்பட மாட்டாது. காரணம், இந்தச் சூழ்நிலையில் டயரின் பயன் பழைய டயரை மாற்றுவதுதான்? எனவே அது இறுதியானது. அதாவது, மீண்டும் விற்பனை செய்யப்படாத நுகர்வோரின் இறுதிப் பயன்பாட்டுக்கு உரிய பொருட்களே, ஜி.டி.பி.யில் சேர்க்கப்படும்.

ஜி.டி.பியைக் கணக்கிட சில விதிகள் :
சீன கம்பெனி இந்தியாவில் பொருள் தயாரித்து விற்பனை செய்தாலும், அது உள்நாட்டு உற்பத்தி கணக்கில் வரும். எந்தத் தேசத்தவர் உற்பத்தி செய்கிறார் என்பது ஜி.டி.பி.யில் முக்கியமல்ல. அது உள்நாட்டில் தயாரானதா என்பது மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அதேசமயம், இந்திய கம்பெனி, அமெரிக்காவில் உற்பத்தி செய்து விற்பனை செய்தால், அது இந்திய ஜி.டி.பி.யில் வராது.

Comments