பணத்தால் கணக்கிட முடியாத செலவு!

நாம் எந்த ஒரு பொருளைப் பெற்றுக்கொள்ளும் போதும், அதற்குப் பதிலாக, இன்னொரு பொருளைத் தியாகம் செய்கிறோம். அந்தத் தியாகமே, ‘அமையச் செலவு’ அல்லது ‘வாய்ப்புச் செலவு’ (Opportunity Cost) என்று அழைக்கப்படுகிறது. பொருளியலின் முக்கிய கருத்தான இது, வர்த்தக செயல்பாட்டு முடிவுகளில், பெரும் தாக்கத்தைச் செலுத்துகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் பல பொருட்கள் தேவைப்படுகின்றன. அவை, அளவிலும் நன்மையிலும் வேறுபட்டவை. இந்த எல்லா பொருட்களிலும், தனிப்பட்ட ஒருவருக்கு விருப்பமிருக்கலாம். ஆனால், அவருடைய பண சக்தி வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, எல்லாவற்றையும் பெற முடியாது. சிலவற்றைப் பெற்றுக்கொண்டும், சிலவற்றைப் பெற்றுக்கொள்ளாமலும் இருப்பார். இந்நிலையில், அவர் விரும்புகின்றவற்றில், எதைப் பெற்றுக்கொள்ளப் போகிறார் என்பதைத் தெரிவு செய்யவேண்டி இருக்கிறது.

ஒரு பொருளைப் பெற்று, அதனால் திருப்தி அடைகிறார் எனில், அதேசமயம் வேறொரு பொருளைப் பெறாமலும் போகிறார் என்று அர்த்தம். அந்தப் பெறப்படாத பொருளின் மூலம் அடையக்கூடிய, நன்மையையும் திருப்தியையும் சேர்த்து இழக்கிறார். அப்படியான சூழலில், ஒரு குறிப்பிட்ட பொருளின் திருப்தியை அனுபவிப்பதற்குச் செய்யப்படும் உண்மையான செலவு என்ன? அது நாம் செலவழிக்கும் பணமல்ல. நாம் பெற்றுக்கொள்ளாமல் போகும் இன்னொரு பொருளும், அதன்மூலம் கிடைக்காமல் போகும் திருப்தியும் ஆகும். உதாரணத்திற்கு, பிளஸ் 2 முடித்த சரவணன், ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய கல்விச் செலவை எப்படிக் கணக்கிடுவீர்கள்? அவருடைய டியூஷன் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுச் செலவு, புத்தகச் செலவு உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவைக் கூட்டித்தானே? ஆனால், உண்மையான செலவு, அந்தப் பணச் செலவு மட்டும் அல்ல... பின்னர் என்ன அது?

இப்படி யோசித்துப் பாருங்கள், சரவணன், பிளஸ் 2 முடித்த பிறகு, அவனுக்கு முன் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று, கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும்; இல்லாவிட்டால் எங்கேனும் வேலைக்குச் செல்ல வேண்டும்; கல்லூரியில் சேரவில்லை என்றால், அவன் ஏதேனும் ஒரு ஊதியத்துக்கு வேலை போயிருப்பான் தானே? இப்போது, சரவணனுடைய வேலை மூலம், அவனுக்கு என்னென்ன கிடைக்கும் என்பதைப் பட்டியலிடுங்கள்? நான்கு ஆண்டுகள் அனுபவம், சரவணனுடைய அனுபவத்துக்காக, அவனுக்கு கிடைக்கும் பதவி உயர்வு, நான்கு ஆண்டுகள் சம்பளம் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்வான். அப்படிப் பார்த்தால், அவனுடைய கூலி, வேலை அனுபவம், நேரம் உள்ளிட்ட பலன்களை அடைகிற வாய்ப்பை தியாகம் செய்தே, பொறியியல் படிப்பை அவன் தேர்வு செய்தான். அவ்வாறு, அவன் தியாகம் செய்த வாய்ப்பையே, வாய்ப்புச் செலவு என்கிறோம்.

இன்னொரு எளிமையான உதாரணத்தையும் பார்க்கலாம். ரமேஷுக்கு ஓர் ஓய்வு நாள் கிடைக்கிறது. அன்று, நூறு ரூபாய் செலவு செய்து, ரமேஷ் சினிமா பார்க்கிறான். இப்போது, அவனுடைய அமையச் செலவு என்பது, நூறு ரூபாய் இல்லை. சினிமாவுக்குப் போகவில்லை என்றால், அந்த நேரத்தில் தன்னுடைய விடுபட்ட வீட்டுப்பாடங்களை முடிக்க, ரமேஷ் திட்டமிட்டிருந்தான். எனவே, வீட்டுப்பாடங்களை செய்யாமல் விடுவதே ரமேஷுடைய வாய்ப்புச் செலவாகும்.

முடிவெடுக்க உதவும் வாய்ப்புச் செலவு


வாய்ப்புச் செலவை அறிந்துகொள்வதன் மூலம், நம் எடுக்கும் முடிவு சிறந்ததா என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கு, முதலாவது உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். இப்போது, சரவணன் எப்படி முடிவெடுத்திருப்பான் என்பதை, இலகுவாக ஊகித்து விடலாம் தானே?

‘பொறியியல் படிப்பில், நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண பெற்றுத் தேர்ச்சி பெற்றால், தகுதிக்கேற்ற வேலையும், அதிக சம்பளமும் எனக்கு கிடைக்கும். நான் செய்த நான்கு ஆண்டு தியாகம், வீண் போகாது. எனவே, உடனடியாக வேலைக்குப்போய் அந்த பலன்களைப் பெறுவதைவிட, பொறியியல் படிப்பை படிப்பதிலேயே அதிக பலன் இருக்கிறது’ என்று சரவணன் கருதியதால், தனக்கு முன் இருந்த இரண்டு வாய்ப்புகளில், ஒன்றைத் தியாகம் செய்து, மற்றொன்றைத் தேர்வு செய்தான்.

சுருக்கமாகச் சென்னால், ஒரு பொருள் தேர்வின் வாய்ப்புச் செலவானது, அதற்கடுத்த சிறந்த வாய்ப்பை விடுதல் அல்லது தியாகம் செய்தல் என்பதாகும். நம்முடைய பொருள் தேர்வோடு, அதற்காகச் செய்யப்படும் தியாகத்தை (வாய்ப்புச் செலவை) ஒப்பிடுவதன் மூலம், நம் முடிவு சரியானதுதானா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

பயிற்சி : உடைகள், உணவுப்பொருட்கள், புத்தகங்கள், பொம்மைகள் என்று ஏராளமானவற்றுக்காகச் செலவு செய்கிறோம். இவற்றில் சிலவற்றை எடுத்துக்கொண்டு, அதற்குண்டான வாய்ப்புச் செலவைக் கணக்கிடவும்.

– ரோஷன் செல்வரத்தினம்,

பொருளியல் ஆய்வாளர்.

Comments