வேலையின்மையின் வகைகள்
பொதுவாக ஒருவர் வேலையில்லாமல் இருக்கும் நிலையையே வேலையின்மை (Unemployment) என்று குறிப்பிடுகிறோம். அதாவது, வேலை செய்ய திறன் பெற்ற ஒருவருக்கு, அவர் வேலை தேடியும் (கடந்த ஓராண்டில், ஒரு வாரத்தில் அல்லது ஒரு நாளில்) கிடைக்கவில்லை என்றால், அவரை வேலை இல்லாதவர் என்கிறோம்.
செயல்திறன் கொண்ட தொழிலாளர்களில் (Active Labour Force) உள்ள வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கையே, ‘வேலையின்மையின் அளவு’ (Unemployment rate) எனப்படுகிறது. வேலை செய்ய விரும்பாதவர்கள், இயலாதவர்கள் இதற்குள் அடங்க மாட்டார்கள்.
வேலை இருந்தும், சொந்தக் காரணங்களால் வேலை செய்யாமல் இருப்பதை தன்னிச்சையான வேலையின்மை (Voluntary Unemployment) என்பார்கள். அதுவே, பொருளாதார மந்தம், சந்தைக் கட்டமைப்பு, அரசின் பொருளாதாரக் கொள்கைகள், கல்வி, திறமை போன்ற காரணங்களால் வேலை கிடைக்காமல் இருப்பதை, ‘தன்னிச்சையற்ற வேலையின்மை’ (Involuntary Unemployment) என்கிறார்கள். அதாவது, நான் வேலை செய்ய வேண்டும் என்று வேலை தேடுகிறேன். எனக்கு அதற்கான திறன் உள்ளது. இருந்தாலும், எனக்குரிய வேலை கிடைக்காமல் இருந்தால், அதை தன்னிச்சையற்ற வேலையின்மை என்று குறிப்பிடுகிறோம்.
இந்த இரு பெரும் பிரிவுகளைத் தவிர வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரத்தில் கீழ்க்கண்ட வகையில் வகைப்படுத்தப்படும்.
கட்டமைப்பு வேலையின்மை (Structural Unemployment).
கட்டமைப்பு வேலையின்மை நீண்டகாலப் பிரச்னை. இதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று தொழில்நுட்ப முன்னேற்றம். தொழிற்சாலைகளில் நவீன இயந்திரங்களின் வருகை, தானியங்கிமயம் (எ.கா.: தானியங்கி கார்கள், ரோபோக்கள்) போன்ற காரணங்களால், தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள். இவர்கள் புதிய துறையில் பயிற்சி பெற்று வேலைக்குப் போகும் வரை, இந்த வேலையின்மை நீடிக்கும்.
அதேபோல், விவசாயப் பொருளாதாரத்திலிருந்து தொழில்துறை சார்ந்த பொருளாதாரத்துக்கு மாறும்போது, விவாசாயத் தொழிலாளிகளுக்கு உடனடியாக தொழிற்சாலைகளில் வேலை கிடைக்காது. மூன்றாவதாக நுகர்வோர் தேவை மாற்றங்களால் பொருளாதார கட்டமைப்பு மாறும். அப்போதும் வேலையிழப்பு ஏற்படும். இவ்வாறு எழக்கூடியவை ‘கட்டமைப்பு வேலையின்மை’ (Structural Unemployment).
சுழல் வேலையின்மை (Cyclical Unemployment)
பொருளாதார மந்தம் தோன்றும் போதெல்லாம் எழக்கூடியது ‘சுழல் வேலையின்மை’ (Cyclical Unemployment) எனப்படுகிறது. பொருளாதார மந்தத்தால், உற்பத்தியும் குறைக்கப்படும். இதனால், பலரும் வேலையிழப்பார்கள். அதனால், நாட்டின் பணச்சுழற்சி குறையும். இதன் காரணமாக உற்பத்தி மேலும் குறையும். இதுபோன்ற சுழற்சித் தன்மையைக் கொண்டிருப்பதால் தான், இந்த வேலையிழப்பை சுழல் வேலையின்மை என்கிறோம்.
உராய்வு வேலையின்மை (Frictional Unemployment).
ஒருவர், தனது வேலையை விட்டு, வேறு நல்ல வேலை தேடுதல் போன்ற தற்காலிக காரணங்களால் எழக்கூடியது “உராய்வு வேலையின்மை” (Frictional Unemployment). குறுகிய காலத்திற்கு மட்டும் இது ஏற்படும். ஆனால், பொருளாதார மந்தகாலத்தில் (சுழல் வேலையின்மை) குறைந்து காணப்படும். வேலையை விட்டுவிட்டால், வேறு வேலை கிடைக்குமா என்று ஊழியர்களுக்கு ஏற்படும் அச்சமே இதற்குக் காரணம் ஆகும்.
பருவ வேலையின்மை (Seasonal Unemployment).
கிராமங்களில் அறுவடை இல்லாத காலங்களில், விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையின்மை ஏற்படும். சுற்றுலாவை நம்பியுள்ள ஒரு பகுதியில், குறிப்பிட்ட பருவத்தில் மட்டும்தான் பயணிகள் வருகையும், அதைச் சார்ந்த வேலையும் இருக்கும். தீபாவளி காலத்தில்தான், ஏராளமான பட்டாசுத் தொழிலாளர்களுக்கு வேலை இருக்கும். இப்படி, குறிப்பிட்ட பருவத்தைத் தவிர, ஏற்படும் வேலையிழப்புகளை, பருவ வேலையின்மை” (Seasonal Unemployment) என்கிறோம்.
‘மறைமுக வேலையின்மை’ (Disguised Unemployment)
ஒருவரே செய்து முடிக்கக்கூடிய வேலையை, வேலையற்ற மற்ற குடும்ப உறுப்பினர்களும் இணைந்து செய்வார்கள். அவர்கள் எல்லோரும் வேலை செய்வதாக எண்ணிக்கொண்டிருப்பார்கள். இதுபோன்ற நிலையை கிராமங்களில் பார்க்கலாம். இதில் எல்லோருக்கும் வேலை இருப்பது போல் தெரிந்தாலும், உண்மையில் அவர்களுக்கான வேலை இருப்பதில்லை. இதனால், அவர்களின் உழைப்புத் திறனுக்கான உற்பத்தி இருக்காது. குறைந்த வேலைக்கு அதிகமான ஆட்கள் இருந்து, வேலை இருப்பதாக ஏற்படும் பிரமையை “மறைமுகமான வேலையின்மை” (Disguised Unemployment) என்கிறோம்.
நன்றி: (க.ஜோதி சிவஞானம் எழுதிய ‘வேலையின்மை என்றால் என்ன?’ கட்டுரை)

Comments
Post a Comment