பொருளியல் - மனிதனுடன் பிறந்த கலை
இயற்கையில் அளவாக கிடைக்கும் வளங்களை முறையாகப் பயன்படுத்தி, மனிதர்களின் தேவையை நிறைவேற்றுவது எப்படி என்பதை படிப்பதையே 'Economics' (பொருளியல்) என்கிறோம். Oikonomia (ஓய்க்கோனோமியா) எனும் கிரேக்க சொல்லிலிருந்து Economics (எக்கனாமிக்ஸ்) என்ற வார்த்தை பிறந்தது. இதற்கு, வீட்டு நிர்வாகம் என்று பொருள். அதாவது, குடும்பத்துக்கு அத்தியாவசியமான பொருட்களைச் சம்பாதிப்பது எப்படி?, அதை சிக்கனமாக செலவு செய்து எப்படி?, எதிர்கால தேவைக்காக சேமித்து வைப்பது எப்படி? என்பது போன்ற விஷயங்களை பற்றி பேசுவதை ஆரம்பத்தில் பொருளியல் (Economics) என்றார்கள். பிற்காலத்தில் (17ம் நூற்றாண்டில்), அருமைவாய்ந்த இயற்கை வளங்களை (Scarce Resources), ஒட்டுமொத்த நாடும் எப்படி திறம்பட பயன்படுத்துவது என்பதை பற்றி பேசுவதாக, பொருளியல் விரிவடைந்தது.
தமிழ் மொழி அறிய எப்படி உயிர்மெய் எழுத்துகள் அடிப்படையோ, அப்படித்தான் பொருளியலுக்கு ‘பற்றாக்குறை’ என்ற கருத்தாகும்.
பொதுவாக, இயற்கை வள ஆதாரங்கள் என்பது, அள்ள அள்ள குறையாத அமுத சுரபிகள் அல்ல. பூமியில் மரம், நிலம், நீர், செப்ப, பெட்ரோல் என்று எந்த இயற்கை வளத்தை எடுத்துக்கொண்டாலும், அது எல்லைக்கு உட்படட்டதுதான். இதையே, உற்பத்தி வளங்களின் பற்றாக்குறை அல்லது அருமை (Scarcity) என்கிறோம். ஆனால், மனிதர்கள் தேவை அப்படியா?
மனிதர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் மட்டுமல்ல, பைக், கார், ஃபிரிட்ஜ், செல்போன் போன்ற நவீன தேவைகளும் ஏராளமானது. இந்த தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றால், அதற்காக தினமும் எத்தனை கோடி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று யோசித்து பாருங்கள். சுருக்கமாக சொன்னால், அளவற்ற தேவை, ஆனால் அளவான வளம் என்கிற நிலை. இந்த முரண்பாடே பொருளியலின் அடிப்படை கருத்தாக இருக்கிறது.
உதாரணத்திற்கு, நம் வீட்டு தண்ணீர் தொட்டியில் நிறைய இருக்கும்போது, அதை தாரளாமாக பயன்படுத்துகிறோம். அதுவே, கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போதோ, அல்லது மின்வெட்டு காரணமாக தண்ணீர் பம்ப் மோட்டாரை இயக்க முடியாத நாளிலோ யோசித்து பாருங்கள். அப்போது, காரை கழுவப்போகிறேன், தோட்டத்திற்கு தண்ணீர் இரைக்கப்போகிறேன் என்று சொல்வோமா? நிச்சயமாக அப்படி செய்ய மாட்டோம். காரணம், தண்ணீரின் அருமை காரணமாக, சமையல், குடிநீர் உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்கே முன்னுரிமை அளிப்போம். இதுதான் பொருளியலும்; அருமையான வளங்களை, வீண் விரையம் செய்யாமல், திறம்பட பயன்படுத்துவது என்பதைப் பற்றி படிப்பதாகும்.
பொருளியல் என்பது மனிதனோடு பிறந்த கலை. இந்த பொருளியலை அறிந்தோ அல்லது அறியாமலோ, ஆதிகாலம் முதல் மனிதன் சிறந்த முறையில் பொருள் பயன்பாட்டை கையாண்டு வருகிறான். இன்றைய காலத்தில், மக்கள்தொகை மற்றும் பொருட்களின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்லும் சூழலில், பொருளியல் குறித்து அறிவியல்பூர்வமான பார்வையை வளர்த்துக்கொள்வது மிக அவசியமாகிறது. பணவீக்கம் ஏன் ஏற்படுகிறது?, வேலையிழப்பு பிரச்னைக்கு என்ன காரணம்?, மக்களின் பொருளாதார நடவடிக்கையில் அரசு தலையிடலாமா? என்பன போன்ற, நம்மோடு தொடர்புடைய பல கேள்விகளுக்கும் பொருளியல் தெளிவான பதில் சொல்லும்.
“மனிதனின் எந்த ஒரு நடவடிக்கையின் முக்கிய நோக்கம் செல்வத்தைத் திரட்டுதலே. அந்தச் செல்வம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதை அறிவது மிகவும் அவசியமானது, ஆர்வமானது. நாடுகளின் செல்வத்தின் தன்மை, செல்வத்தை உருவாக்கும், பெருக்கும் காரணிகள் ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தரும் அறிவியலே பொருளியல்” - ஆடம் ஸ்மித், பொருளியல் அறிஞர்.
- ரோஷன் செல்வரத்தினம்

Comments
Post a Comment