ஏன் தொழிலில் இத்தனை பிரிவுகள்?
இருவருக்கும் இரண்டுமே தேவை என்கிற நிலையில், தாங்களாகவே தங்களுக்கு தேவையான பொருள்களான மீனையும், வாழைப்பழத்தையும் சம்பாதித்து கொண்டால் எப்படி இருக்கும்? லலிதா ஒருநாளில், பாதியை மீன்பிடிக்கவும், மீதியை வாழைப்பழ விவசாயத்திற்கும் செலவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி, அவருக்கு 5 வாழைப்பழமும், 5 மீன்களும் கிடைக்கும். ரமேஷூக்கு உள்ள திறமைப்படி, அவருக்கு 5 வாழைப்பழங்களும், 15 மீன்களும் கிடைக்கும்.
இப்போது இருவருக்கும் உள்ள வாய்ப்பு செலவை கணக்கு போடலாம். லலிதாவை பொறுத்தவரை
நாளொன்றுக்கு 10 மீன்கள் பிடிக்கலாம் (அ) 10 வாழைப்பழம் பெறலாம். எனில், 10 மீன்கள் = 10 வாழைப்பழம்.
ஆக, 1 மீனின் மதிப்பு= 10 வாழைப்பழம் / 10 =1 வாழைப்பழம்.
1 வாழைப்பழத்துக்கான வாய்ப்பு செலவு, 1 மீன்.
ரமேஷை பொறுத்தவரை,
10 வாழைப்பழம் = 30 மீன்கள் வாய்ப்பு செலவு என்றால், 1 வாழைப்பழம் = 30 மீன்கள்-- ---/ 10 = 3 மீன்கள் .
அதாவது, 1 வாழைப்பழம் உற்பத்தி செய்யும் நேரத்தில் அவரால், 3 மீன்களை பிடித்து விட முடியும்.
இரண்டையும் இப்போது ஒப்பிட்டு பாருங்கள். 1 வாழைப்பழத்துக்கு லலிதாவுக்கு ஆகும் வாய்ப்பு செலவு 1 மீன். ஆனால், ரமேஷுக்கு 3 மீன்கள். ரமேஷை விட, லலிதாவுக்கு வாழைப்பழ விவசாயத்தில் வாய்ப்பு செலவு குறைவு. எனவே, லலிதா இப்போது வாழைப்பழ விவசாயம் மட்டும் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மறுபுறம், ரமேஷூக்கு நாள் முழுக்க மீன்களை மட்டும் பிடிக்கிறார் என்றால், அவருக்கு கிடைக்கும் மீனின் எண்ணிக்கை 30.
இப்போது, ரமேஷூக்கு தேவைப்படும் வாழைப்பழத்தை லலிதாவிடம் வாங்கிக்கொள்ள முடிவு செய்து, அதன்படி 1 வாழைப்பழத்துக்கு பதிலாக லலிதாவுக்கு இரண்டு மீன்களை கொடுத்தால் யாரிடம் எவ்வளவு மிச்சம் இருக்கும்? ரமேஷ் லலிதாவிடம் உள்ள 10 பழங்களிலிருந்து 5 பழங்களை வாங்கினால், அதற்காக அவர் 10 மீன்களை கொடுப்பார். இப்போது, ரமேஷிடம் 20 மீன்கள் மிச்சமிருப்பதோடு, 5 வாழைப்பழமும் கிடைக்கும். லலிதாவுக்கு, 10 மீன்கள் கிடைப்பதோடு, 5 வாழைப்பழமும் கையில் இருக்கும்.
தங்களுக்கு தாங்களே உற்பத்தி செய்து கொண்டால், லலிதாவுக்கு வெறும் 5 மீன்களும், 5 பழங்களும் மட்டுமே கிடைத்தது. ஆனால், வேலையை பிரித்து செய்யும்போது,10 மீன்களும், 5 பழங்களும் கிடைக்கிறது. ரமேஷூக்கோ முன்புள்ள நிலையில், 5 பழங்களும், 15 மீன்களும் கிடைத்த நிலையில், தற்போது 5 பழங்களும், 20 மீன்களும் கிடைக்கிறது.
ஆச்சர்யமாக இருக்கிறதா? இதைத்தான் ஒப்பீட்டு நயத்துவம் (Comparative Advantage) என்கிறோம். அதாவது, எல்லோருக்கும் எல்லா திறமைகளும் இருந்தாலும், யாருக்கு எதில் குறைவான வாய்ப்பு செலவும், அதிக திறமையும் (சிறப்புத் தேர்ச்சி*-Specialization) இருக்கிறதோ அதையே அவர் செய்ய வேண்டும். சிலருக்கு சமைக்கவும் தெரியும், கணினியில் புரோகிராமிங் எழுதவும் தெரியும் என்றாலும், எதை விரைவாகவும் இலகுவாகவும் செய்ய முடிகிறதோ அதையே தொழிலாக செய்ய வேண்டும். தமக்குத்தாமே எல்லா வேலைகளையும் செய்யும்போது கிடைக்கும் லாபத்தை விட, தொழில்களை பிரித்து செய்வதால் கிடைக்கும் லாபம் அதிமாகிறது. மேற்சொன்ன உதாரணத்தில், வாழைப்பழ விவசாயமும், மீன்பிடிக்கும் திறமையும் ரமேஷூக்கு இருந்தாலும், மீன்பிடிப்பதில் ரமேஷுக்கு கூடுதல் தேர்ச்சி இருப்பதால், அதையே அவர் தொழிலாக செய்ய வேண்டும். அதே போல், வாழைப்பழ விவசாயத்தில் யாருக்கு அதிக திறமை இருக்கிறதோ, அதை அவர் முழுவதுமாக செய்ய வேண்டும். இப்படியாக, இருவரும் தனித்தனியே உற்பத்தி செய்துவிட்டு, அதை வர்த்தகம் செய்து கொண்டால், இருதரப்புக்கும் அது அதிக நன்மையை தருகிறது. இரண்டு பேருக்கான இந்த உதாரணம், உலகில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.
அதன்படியே, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயை எடுத்துக்கொண்டால், தனக்கு தேவையான மண்வெட்டியை கொல்லனிடம் இருந்தும், தேவையான ஆடையை நெசவாளனிடம் இருந்தும், டிராக்டரை வாகனத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தும், பானையை குயவனிடமிருந்தும் பெறுவதோடு, மருத்துவத்துக்கு வைத்தியனையும் நாடுகிறான். எல்லாவற்றையும் தனக்குத்தானே உற்பத்தி செய்வதைவிட, தொழிலை பிரித்து செய்தால் லாபம் கிடைக்கும் என்பதே இதற்கு காரணம்.
ரோஷன் செல்வரத்தினம், பொருளியல் ஆய்வாளர்



Comments
Post a Comment