எந்த பொருளாதார முறை சரியானது?

10ம் வகுப்பு மாணவர்களான சிந்துஜாவும் கார்த்திக்கும், ஓய்வுநேரத்தில் பொதுப் பிரச்னைகளைப் பற்றி பேசுவது வழக்கம். ‘வீட்டு வாடகையும் விலைவாசியும் மலைபோல் உயர்ந்து வருகிறது. ஏழை, சாமானிய மக்களால், சமாளிக்க முடியவில்லை. இதனால், அரசு தலையிட்டு, விலைவாசியைக் குறைக்க வேண்டும். அல்லது பிரச்னைக்கு முடிவு கட்ட, எல்லா சொத்துகளையும் அரசே சொந்தமாக்கிக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளை அரசே கட்டுப்படுத்த வேண்டும்.” என்று கார்த்திக்கிடம் தெரிவித்தாள் சிந்துஜா.

“அது எப்படி? அரசு தலையிட்டு விலையை கட்டுப்படுத்துவதா? அப்படியென்றால், உழைப்பவரின் உழைப்புக்கு என்ன மதிப்பு? பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் தலையீடுகள் குறைந்தால்தான், மக்கள் சுதந்திரமாக வணிக நடவடிக்கையில் ஈடுபட முடியும். இந்தியாவும் ஜப்பானை போல் ஆகும்” என்றான் கார்த்திக். அப்படியெனில் விலைவாசியைக் குறைக்க வழி சொல் என்று கார்த்திக்கை மடக்கினாள் சிந்துஜா.

இருவகைத் தீர்வுகள்

இப்பிரச்னையை பாலு சாரிடம் அவர்கள் கொண்டு சென்றார்கள்-. இருவரின் வாதங்களையும் கேட்டுக்கொண்ட பாலு சார், “கார்த்திக் சொல்வதைப் பார்த்தால், அவன் ஆதரிப்பது, ‘சந்தைப் பொருளாதார’ (Market Economy) முறை என்றும், சிந்துஜா ஆதரிப்பது, ‘பொதுவுடைமை பொருளாதார முறை’ (Command Economy -: Central Direction) என்றும் தெரிகிறது. சந்தைப் பொருளாதார முறை என்பது, சந்தையை மையமாக வைத்து இயங்கும் பொருளாதார முறையாகும். சந்தையில் மக்களின் தேவை நிலவரத்துக்கு ஏற்ப, உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வார்கள். இதைத்தான் தயாரிக்க வேண்டும்; மக்கள் இந்த வேலையில்தான் ஈடுபட வேண்டும் என்று அரசு எந்தத் தலையீடும் செய்யாது. யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் தொடங்க முடியும்.; அதை விற்பனை செய்யலாம், வாங்கிக்கொள்ளலாம்; சிங்கப்பூரை சந்தைப் பொருளாதார முறைக்கு நெருக்கமான நாடு என்று கூறலாம்” என்று சொன்ன பாலு சார்,

“அதற்கு நேர்எதிரானது, பொதுவுடைமை பொருளாதார முறை. எந்தப் பொருளை, எந்த அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை அரசுதான் தீர்மானிக்கும். சோவியத் ரஷ்யா, கியூபா, வடகொரியா போன்ற கம்யூனிச நாடுகளில், இந்தப் பொருளாதார முறை அமலில் உள்ளது.” என்றார் பாலு சார்.

போட்டி அவசியம்


“சரி, உங்களிடம் இப்போது கேள்வி கேட்பேன். அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்’ என்று பிளேட்டை திருப்பிப் போட்டார் பாலு சார். “சரி சார்” என்றனர் இருவரும். “நம் வகுப்பில், யார் படித்தாலும் படிக்காவிட்டாலும் பிரச்னையில்லை; எல்லோரும் ‘ஆல் பாஸ்’ என்ற முறையைக் கொண்டு வந்து, மதிப்பெண் முறையை ஒழித்துவிட்டால் என்ன ஆகும்?” என்று கேட்டார் பாலு சார். “யாருமே படிக்க மாட்டார்கள். தேர்வில் பெயிலாகி விடுவோம் என்ற பயம் போய்விட்டால், எல்லோரும் அலட்சியமாக இருந்து விடுவார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட, மதிப்பெண் இல்லை என்றால், போட்டி போடுவதில் ஆர்வமிழந்துவிடுவார்கள்.” என்றாள் சிந்துஜா.

“அதே விதிதான் பொருளாதார விஷயத்திலும் பொருந்தும். போட்டி இருந்தால்தான், கண்டுபிடிப்புகளும், உழைப்பும் பெருகும். உற்பத்தியும் அதிகமாகும். பொதுவுடைமைப் பொருளாதார முறையில், ‘அதிகம் உழைப்பவர்களுக்கு அதிக லாபம்’ என்ற கருத்துக்கு இடமில்லை. தனியாக நாம் தொழிற்சாலைகள் நடத்தி வருவாயைப் பெருக்க முடியாது. கடினமாக உழைத்தாலும் சரி, உழைக்காமல் ஓ.பி. அடித்தாலும் சரி, ஒரே வருவாய் என்றால் என்ன ஆகும்? மந்த நிலை உருவாகும்; உழைப்பு குறையும்; அதன் விளைவாக பஞ்சம் தான் வரும். இதுதவிர, மக்களின் தேவைக்கேற்ப (Demand) தொழிற்துறையினர் சுதந்திரமாக உற்பத்தி செய்ய முடியாது. மாறாக, அரசே எதை, எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று சொல்லும். இப்படி எல்லாவற்றிலும் அரசின் தலையீடு இருக்கும்போது, உற்பத்தியின் வேகம் வெகுவாகக் குறைவதோடு, தேவையான பொருட்களிலும் பற்றாக்குறை அதிகமாகும்.” என்றார் பாலு சார்.

அரசாங்க பாதுகாப்பு

“சரி இப்போது கார்த்திக்குக்கான கேள்வி. நீ சொல்வது போல், சந்தைப் பொருளாதார முறையில், அதிகமாக உழைப்பவனுக்கு அதிக பலன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். அப்படி, நீ அதிகமாக உழைத்து சம்பாதித்து வைத்த பணத்தையோ, சொத்தையோ கொள்ளைக்காரன் பிடுங்கிக்கொண்டால், என்ன செய்வாய்?” என்று கேட்டார் பாலு சார். கொஞ்சமும் யோசிக்காமல் “காவல்நிலையம் சென்று புகார் அளிப்பேன்” என்றான் கார்த்திக்.

“அப்படியெனில், உனது சொத்தைப் பாதுகாக்க அரசின் உதவி தேவைப்படுகிறது அல்லவா? ஆம், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான், வியாபாரமும் சரியாக நடக்கும். அதனைக் காப்பாற்றுவதில் அரசுக்கே முதன்மைப் பொறுப்பு இருக்கிறது. அடுத்ததாக, நாம் விரும்பிய எல்லா பொருட்களையும் தயாரித்து விற்க முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும். உதாரணத்துக்கு துப்பாக்கியை எடுத்துக்கொள்வோம். எல்லோருடைய கையிலும் துப்பாக்கி இருந்தால் என்ன ஆகும்? ஆபத்தில்தான் முடியும். அதுபோல்தான் மது, போதைப்பொருள், கிட்னி உள்ளிட்ட உடல் பாகங்களின் விற்பனையும். பொதுச் சமூக நன்மைக்கு அவை ஊறு விளைவிப்பதால், அவற்றைத் தடுக்க, அரசின் தலையீடு அவசியமாகிறது. பொது நன்மைக்காக, அரசு பொருளாதாரத்தில் தலையிடலாம் தானே?” என்று கேட்டார் பாலு சார்.

“கண்டிப்பாக தலையிட வேண்டும். ஆனால், நீங்கள் சொல்லும் பொருளாதார அமைப்பு எந்த வகையைச் சாரும்? எங்களுக்கு புரியவில்லையே” என்றனர் இருவரும்.

கலப்புப் பொருளாதாரம்

‘நான் சொல்லும் வகைக்கு, கலப்பு பொருளாதாரம் (Mixed Economy) என்று பெயர். இதில், சொத்துரிமை, தொழில் தொடங்கும் உரிமை, சுதந்திரமாக வியாபாரம் செய்யும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். அதேசமயம், சுதந்திரமான சந்தைப் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதுகாக்க அரசின் தலையீடும் இருக்கும். அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. ஏமாற்று, திருட்டு, அளவு நிறுவைகளில் மோசடி போன்றவற்றுக்கு அரசு தண்டனை அளிப்பது

2. தொழில்துறையில் ஒருசிலர் மட்டும் ஆதிக்கம் செய்வதைத் தடுப்பது

3. மது, ஆயுதங்கள், யானைத் தந்தங்கள் போன்றவற்றின் விற்பனையைத் தடுப்பது

4. பொதுத்துறைகள் மூலம் ஏழைகளும், கிராமப்புற மக்களும் பயனடையும் வகையில் குறைந்த கட்டண போக்குவரத்து வசதி, கிராமப்புற மின்சாரம், தொலைத்தொடர்பு, மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட சேவைகளையும் ஏற்படுத்துவது

5. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க சாலை போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது

6. சொத்துரிமையைப் பாதுகாக்கும் சட்டங்கள் இயற்றி, தனியுடைமைக்குப் பாதுகாப்பளிப்பது

7. வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த, குடிமக்களுக்குப் போதிய திறன் பயிற்சிகளை அளிப்பது. இது போன்றவற்றில் அரசின் தலையீடு இருந்தால்தான், சந்தைப் பொருளாதாரம் சரியாக இயங்க முடியும். இந்தக் கலப்பு பொருளாதார முறைதான், உலகின் வல்லரசான அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ளது.” என்று முடித்தார் பாலு சார்.

ரோஷன் செல்வரத்தினம், பொருளியல் ஆய்வாளர்

Comments