பொருளாதார மருத்துவர் கெயின்ஸ்
கடந்த வாரம், பணவீக்கத்தைப் பற்றிப் பார்த்தோம். அது பல வகைகளில் பொருளாதாரத்திற்கு மோசமானது என்று சொன்னேன். சிலசமயம் அரசு தெரிந்தே பணவீக்கத்தை ஏற்படுத்தும்; ஏன் தெரியுமா? என்று கேட்டார் பாலு சார்.
‘அரசே பண வீக்கத்தை ஏற்படுத்துமா? எப்படி என்று கேட்டாள் சிந்துஜா.
‘ஒரு நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்றால், அங்கு பொருளாதார வளர்ச்சியும் ஒழுங்காக இருக்க வேண்டும். அதற்கு நேர் எதிரானது பொருளாதார வீழ்ச்சி அல்லது மந்தநிலை. பொருளாதார மந்தநிலை என்பது, மக்களிடையே பணச்சுழற்சி ஸ்தம்பித்த நிலையைக் குறிக்கும். விலை மலிவாக இருந்தபோதும், பொருட்களை வாங்க மக்களிடம் பணம் இருக்காது. பொருட்களுக்குச் சரியான விலை கிடைக்காததால், உற்பத்தி குறையும். அதைத் தொடர்ந்து, பலருக்கு வேலைவாய்ப்பும், வருமானமும் பறிபோகும். வேலையின்மையின் விளைவாக, தற்கொலைகளும், குற்றச்செயல்களும் அதிகரிக்கும். இப்படியாக மந்தநிலையின் விளைவுகள் மோசமானவை. இப்படிப்பட்ட, பொருளாதார மந்தத்தை உற்சாகப்படுத்த, அரசே நுகர்வோராக மாறி செலவு செய்யும். அதனால், மக்கள் கையில் பணப்புழக்கம்கூடி, பணவீக்கம் ஏற்படும்.’ என்றார் பாலு சார்.
அரசே நுகர்வோராக மாறுமா? சந்தைப் பொருளாதாரத்தில் அரசு தேவையில்லாமல் தலையிடக்கூடாது; சந்தைப் பொருளாதாரத்தில் தற்காலிகமாக ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலும், அது தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது என்று சொன்னீர்களே? இப்போது மட்டும் அரசு தலையிடலாமா? என்று கொக்கி போட்டான் கார்த்திக்.
‘உண்மைதான். ஆனால், ஒருவனுக்கு பெரும் காயம் ஏற்பட்டு, ரத்தப்போக்கு கடுமையாக இருக்கும்போது, மருத்துவர் என்ன செய்ய வேண்டும்? உடனே முதலுதவி செய்ய வேண்டுமா இல்லையா? இதைத்தான், ஜான் மேனார்ட் கெயின்ஸ் வலுவாக வாதிட்டார்’ என்றார் பாலு.
யார் அவர்? என்றாள் சிந்துஜா.
ஜான் மேனார்ட் கெயின்ஸ், பிரிட்டனைச் சேர்ந்த பொருளியல் வல்லுனர். 20ம் நூற்றாண்டின் நவீன பேரியல் பொருளாதாரத்தின் தந்தை என்று கருதப்படுபவர். நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படும்போது, அது தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் என்று அரசு விட்டுவிடக்கூடாது. பொருளாதார வளர்ச்சியை அரசே முடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டை அவர் முன்வைத்தார்.
பொருளாதார வளர்ச்சியை அரசே எப்படி முடுக்கும்? என்று கேட்டான் கார்த்திக்.
‘பட்ஜெட்டில் பணம் இல்லை என்ற காரணத்திற்காக அரசு வளர்ச்சித் திட்டங்களைக் குறைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கெயின்ஸ் இதைத் தவறு என்று வாதிட்டார். அவரின் யோசனைப்படி, வங்கிகளிடம் கடன் பெற்று பல சாலைகளை அரசு அமைக்க வேண்டும்’ என்றார் பாலு.
அப்படிச் செய்தால் என்னவாகும்? என்றாள் சிந்துஜா.
‘பல வளர்ச்சித் திட்டங்களை அரசு தொடங்கினால், அந்த வேலைக்கு, தொழிலாளர்கள், பொறியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் தானே? இதனால் வேலைவாய்ப்பு பெருகி, நிறைய மக்களின் வருமானம் உயரும். வேலையில் அமர்த்தப்பட்ட மக்கள், தங்கள் சம்பளத்தை செலவு செய்வதனால் நிறைய பொருட்கள் விற்பனையாகும். இப் பொருட்களுக்கு தேவை அதிகமாவதால், அவற்றின் உற்பத்தி பெருகும். மேலும் மேலும் இப்பொருட்களுக்கு தேவைகள் அதிகமாவதால், அவற்றை உற்பத்தி செய்ய, முன்பைவிட அதிக தொழிற்சாலைகள் உருவாகும். அதன்மூலம் இன்னும் வேலைவாய்ப்புகள் உருவாகும். வேலையில்லாத் திண்டாட்டம் சரி செய்யப்பட்டு, புதிய தொழிலாளர்கள் வருமானம் பெற்று, அதைச் செலவு செய்வதால் பொருட்களின் உற்பத்தியும் தொழிற்சாலைகளும் பெருகும்.
இதுபோன்ற சூழ்நிலையில் வரிவிதிப்புகள் பெருகி, அரசின் வருமானமும் பெருகிவிடும். அதனால், அரசின் செலவினங்கள் மேலும் பெருகி, ஏற்கெனவே இருந்த பொருளாதார மந்தநிலை குறைந்து பொருளாதார வளர்ச்சி பெருகும் என்பது, மேனார்ட்டின் யோசனை. இதை ‘Multiplier Effect’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
2009ல், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர, மேற்சொன்ன வழியை அரசு பயன்படுத்தியது. 80,000 கோடி டாலர்களை அரசு கடன் வாங்கி செலவழித்து, வேலைவாய்ப்பை அதிகரித்தது. இதனால், மக்கள் கையில் மீண்டும் பணம் புரள ஆரம்பித்தது. தொய்வடைந்த பொருளாதாரம் மீண்டும் உற்சாகம் அடையத் தொடங்கியது.
‘மக்களுக்கு விதிக்கும் வரிகளைக் குறைக்க வேண்டும். கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும். தேவைப்பட்டால், பணத்தையும் அச்சிட வேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் வளர்ச்சியுறும்’ என்பதும் கெயின்ஸின் வாதம். இதை Expansionary Fiscal Policy என்பார்கள். இதற்கு நேர்மாறாய், பொருளாதாரத் தேக்கம் ஏற்படும்போது, அரசின் செலவினங்களைக் குறைப்பது contractionary fiscal policy. ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலானவை, இந்த நிதிக்கொள்கையைத் தான் பின்பற்றுகின்றன.’ என்று விளக்கமளித்தார் பாலு.
‘அரசுக்கு வருமானம் தரும் வரிகளையும் குறைத்துவிட்டு, போதாதற்கு கடன் வாங்கி செலவழித்தால், அரசின் பலம் குறையாதா? குட்டிபோடும் வட்டியை யார் கட்டுவது?’ என்று பதற்றமாய்க் கேட்டாள் சிந்துஜா.
நீ சொல்லும் பிரச்னை முக்கியமானது. கெயின்ஸ் கருத்து குறித்து சர்சைகளும், பெருமளவு விவாதங்களும் உண்டு. எனினும், ஒரு நாட்டின் பொருளாதாரச் சூழலைப் பொறுத்தே, கெயின்ஸின் கருத்து எந்த அளவு பலன் தரும் என்று சொல்ல முடியும்.
– ரோஷன் செல்வரத்தினம், பொருளியல் ஆய்வாளர்



Comments
Post a Comment