பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?
அ ந்த ஆண்டின் வரலாற்றுப் பாடத்தை முடித்துவிட்டு, மாணவர்களுக்கு தேர்வுக்கான சில ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார் வரலாற்று ஆசிரியர் மகேந்திரன். ‘‘ஐயா, வரலாறு என்றால் மன்னர்களையும் நாடுகளையும் பற்றி மட்டுமல்லாமல், வேறு எது எல்லாம் இந்தப் பாடத்தில் நாம் அறியலாம்”’’ என்றான் குபேரன். எதை வேண்டுமானாலும் அறியலாம். ஏனெனில் எல்லாவற்றுக்கும் ஒரு வரலாறு உண்டு என்றார் ஆசிரியர். ‘‘காகிதப் பணத்திற்கு வரலாறு உண்டா?’’” என்றான் குபேரன். ‘‘அதற்கும் ஒரு வரலாறு உண்டு, கூறுகிறேன் கேளுங்கள்”’’ என்றார் ஆசிரியர்.
நாம் இன்று உபயோகிக்கும் காகிதப்பணத்தை, முதன் முதலில் உருவாக்கியவர்கள் காகிதத்தைக் கண்டுபிடித்த சீனர்கள்தான். இவர்கள் 7ம் நூற்றாண்டில் காகிதப்பணத்தை உருவாக்கினார்கள். அதற்கு முன்னர் இருந்த செப்புக் காசுகளை, பல இடங்களுக்கு எடுத்துச் செல்வது சிரமமாக இருந்ததால், வியாபாரிகள் ஓர் உத்தியைக் கடைபிடித்தனர். செப்புக் காசுகளை, ஒரு பாதுகாப்பு வியாபாரியிடம் கொடுத்துவிட்டு, அதற்கு இணையாக ஒரு ரசீது பெற்றனர்.
இந்த ரசீதை யார் கொடுத்தாலும் அவரிடம் செப்புக் காசுகளை, அந்த பாதுகாப்பு வியாபாரி கொடுப்பார். இந்த ரசீதுகளைக் கொண்டு என்ன பொருள் வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த ரசீதுகள் பணத்தின் தன்மையை அடைந்தன. சில நூறு செப்புக் காசுகளுக்கு இணையாக, ஒரு காகிதப்பணம் என்ற கணக்கில், காகிதப் பணம் வெளியிட்டனர். ஒரு காகிதப் பணத்தின் மதிப்பு, அது பெற்றுத் தரும் செப்புக்காசின் அடிப்படையில் இருந்தது.
ஹுங் வு என்ற சீன அரசரின் பெயரால், இந்த காகிதப்பணம் வெளியிடப்பட்டது. இந்த காகிதப்பணம், மல்பெர்ரி மரப்பட்டையில் உருவாக்கப்பட்டது. ஒரு பணத்திற்கு இணையான செப்புக் காசுகள் எத்தனை என்பது, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
காகிதப்பணத்தை பற்றி மார்கோ போலோ, தனது பயணக் குறிப்பில் கூறும்போது, ஐரோப்பியர்கள் அதை நம்ப மறுத்ததுடன், அவரது பணத்தைப் பற்றிய சந்தேகத்தையும் எழுப்பினர் என்கிறார். இந்த அளவிற்கு காகிதப்பணம் ஒரு புதிய முயற்சியாகவும், நம்பமுடியாத பொருளாதார அமைப்பாகவும் இருந்தது. ஏனெனில், தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோக மதிப்பின் அடிப்படையில் இல்லாமல், வெறும் காகிதத்தில் எப்படி இருக்கமுடியும் என்பது கேள்வியாக இருந்தது.
சீனாவில் தோன்றிய காகிதப்பணம், வெறும் 500 ஆண்டுகளுக்கு மட்டுமே புழக்கத்தில் இருந்தது. இதற்கு முக்கிய காரணம், மதிப்பில்லாத போலிப் பணம். அதாவது, செப்புக் காசுகளின் மதிப்புக்கு ஈடாக, காகிதப்பணத்தை அச்சடிப்பதுதான் முறை.
ஆனால், பலரும் செப்புக்காசுகளின் இருப்பு இல்லாமலேயே, அவர்களாகவே இஷ்டத்திற்கு காகிதப்பணத்தை அச்சடித்துக் கொண்டனர். இதனால், வியாபாரிகள் பலரும் காகிதப்பணம் மீது நம்பிக்கை இழந்தனர். இதனால், மீண்டும் காகிதப்பண முறை ஒழிக்கப்பட்டு, சீனாவில் உலோகப்பண முறை திரும்பியது.
மீண்டும் வந்த காகிதப் பணம்
சீனாவில், காகிதப்பணம் வழக்கொழிந்த பின்பு, 17ம் நூற்றாண்டில் ஸ்வீடனில் மீண்டும் காகிதப்பணம் வெளியிடப்பட்டது. ஆனால், அங்கும்கூட, போதுமான உலோகப் பணம் இல்லாமல், வங்கிகளே காகிதப்பணத்தை, அச்சடித்து வட்டிக்கு விட்டன. இதைத் தொடர்ந்து, 18ம் நூற்றாண்டில் வங்கிகள் காகிதப்பணம் வெளியிடுவதை, அரசு தலையிட்டு முறைப்படுத்த ஆரம்பித்தது.
அதாவது, அரசே மத்திய வங்கி ஒன்றை நிறுவி, அதன் மூலம் பணத்தை வெளியிடத் தொடங்கியது. இன்று உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளில் இதுதான் நிலை. இந்தியாவைப் பொறுத்தவரை, மத்திய அரசு நிறுவனமான மத்திய ரிசர்வ் வங்கி (RBI) தான், பணத்தை வெளியிடுகிறது. அரசு தலையீட்டுக்குப் பிறகே, மக்களுக்கு மீண்டும் காகிதப்பணத்தின் மீது நம்பிக்கை உருவாகியது.
காகிதம், மரத்தின் துகள்களிலிருந்து செய்யப்படுவதால், பணம் மரத்தில் காய்க்கிறதா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம்? என்ற கேள்வியுடன் வரலாற்று ஆசிரியர் மகேந்திரன், தனது வகுப்பை முடித்தார்.
பணம் ஏன் வந்தது?
மதிப்புமிக்க உலோகம் மட்டுமல்ல; பாறை, சிப்பிகள், கத்தி, மிருகத்தின் ரோமம் போன்றவைகூட,பணமாகப் பயன்பட்டிருக்கின்றன. இருந்தாலும், தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள், அதிக மதிப்புடையதாக இருந்ததால், பரிவர்த்தனையில் அவை, இடைநிலை வர்த்தகப் பொருளாக மாறின.
– இராம. சீனுவாசன்
இணைப் பேராசிரியர் சென்னைப் பல்கலை.

Comments
Post a Comment