பணத்தின் தன்மை என்ன?



வகுப்பில் சமூக அறிவியல் பாடம் நடந்து கொண்டிருந்தது.

"ஒரு நூற்றாண்டுக்கு முன், எல்லாராலும் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருளாக பணம் மாறியது; அதில் முன்னணியில் இருந்தவை தங்கம், வெள்ளி போன்ற உலோக நாணயங்கள்" என்றார் சமூக அறிவியல் ஆசிரியர் சமூகமணி. ஆனால், இன்று மதிப்பில்லாத காகிதமும், மதிப்பில்லாத உலோக நாணயங்களும் பண மதிப்பைக் கொண்டுள்ளன. இது எப்படி? இதைத் தெரிந்து கொள்வதற்கு முன், காகிதப்பணம் தவிர, வேறு பொருட்களை நாம் பணமாக ஏற்றுக்கொள்ள முடியுமா? அப்படியென்றால், அதைக் கூறுங்கள்? என்றார் ஆசிரியர்!

குபேரன் சிந்தித்தவனாக சொன்னான். “ஐயா எல்லார் வாழ்க்கையிலும் அவசியமான பொருள் உப்பு. எல்லாரும் அதனை எளிதில் பரிவர்த்தனையில் ஏற்றுக்கொள்வார்கள். பணமாக, உப்பை ஏற்றுக்கொள்ளலாமே” என்றான். உடனே ஆசிரியர், ஒரு பிடி உப்பை குபேரன் கையில் கொடுத்தார். பின்பு அவன் கை மீது ஒரு குவளை தண்ணீரை ஊற்ற உப்பு கரைந்தது. எளிதில் அழியக்கூடிய ஒரு பொருள் பணமாக இருக்க முடியாது என்பதை குபேரன் உணர்ந்தான். ‘ஒரு பொருள் பணமாக இருக்கவேண்டும் என்றால் அது நீண்ட நாட்களுக்கு உறுதியாக இருக்கவேண்டும்” என்றார் ஆசிரியர்.

“அப்படியென்றால், நீண்டநாட்களுக்கு உறுதியாக இருக்கக்கூடியது கருங்கல்தான். அதை பணமாகப் பயன்படுத்தலாம்” என்றான் குமார். கீழே கிடந்த ஒரு கருங்கல்லை எடுத்து இதற்கு பதிலாக என்ன தருவாய்? என்றார் ஆசிரியர். “நீங்கள் ஐம்பது கருங்கற்கள் கொடுத்தால், ஒரு பேனா தருகிறேன்” என்றான் குமார். “ஒரு சிறிய பேனாவிற்கு ஐம்பது கருங்கற்கள் கொடுக்கவேண்டும் என்றால், பெரிய பொருள் வாங்குவதென்றால் எத்தனை மூட்டை கருங்கற்கள் வேண்டும்? அதை யார் சுமந்துகொண்டு கடைத்தெருவுக்குப் போவது?” என்றார் ஆசிரியர்.

“லாரியில்தான் கற்களை எடுத்துச் செல்லவேண்டும், இது இயலாத காரியம்” என்று எல்லாரும் கூச்சலிட்டனர். “ஆக பல இடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு பொருள்தான் பணமாக இருக்க வேண்டும்” என்று பணத்தின் மற்றொரு தன்மையை விளக்கினார் ஆசிரியர் சமூகமணி.

“ஐயா! இது போன்று ஒரு கதைப் புத்தகத்தை பணமாக அறிவித்தால் என்ன?” என்ற கேள்வியை முன் வைத்தான் பாண்டியன். “நல்ல யோசனைதான்.” என்று கூறிய ஆசிரியர், “உங்களில் யார், பாண்டியனின் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, பொருட்களை தரப்போகிறவர்?” என்று கேட்டார். சேரன் புத்தகத்தை வாங்கிக்கொண்டு, அதற்கு பதில் பென்சிலை தருவதாகக் கூறினான். உடனே பாண்டியன், “உனது பென்சிலுக்கு பாதிப் புத்தகத்தைத் தான் தர முடியும்” என்றான். “பாதிப் புத்தகத்தை வைத்துக்கொண்டு, நான் ஒன்றும் செய்யமுடியாது, அது எனக்கு வேண்டாம்” என்று சேரன் கூறினான். “இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? பணம் என்றால், அதை பல அலகுகளாக எளிதில் பிரிக்க முடிவதாக இருக்க வேண்டும். அப்போதுதான், பணத்தை வைத்து, சிறிய ஊசி முதல் பெரிய விமானம் வரை வாங்க முடியும்.” என்றார் ஆசிரியர்.

“நம்மில் பலர் உணவாக ஏற்றுக்கொள்ளும் விலங்கின் இறைச்சியை, பல அலகுகளாகப் பிரிக்கமுடியும், அதனை நாம் பணமாக ஏற்றுக்கொள்ளலாம்” என்றாள் சங்கரி. “ஐயா நான் மாமிசம் உண்ணாதவள், அதனை எப்படி பணமாக ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றாள் கருமாரி. “எந்த ஓர் உணவுப்பொருளையும் எல்லாராலும் பணமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. மேலும் உப்பு போன்று, இவையெல்லாம் நீண்ட நாட்களுக்கு உறுதியாகவும் இருக்காது” என்ற ஆசிரியர், ‘‘பணம் என்பதற்கு ஐந்து தன்மைகள் உண்டு. உறுதியானதாக, எளிதில் எடுத்துச்செல்லக்கூடியதாக, பல அலகுகளாகப் பிரிக்கக்கூடியதாக, எல்லாராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக, குறிப்பிட்ட அளவு மட்டுமே இருக்கும் ஒரு பொருள் மட்டுமே பணமாக இருக்க முடியும்.’’ என்று கூறினார்.

“இப்போது உலோக நாணயங்களுக்கும், காகிதப் பணத்துக்கும் வருவோம். உலோக நாணயங்கள் உறுதியானவை என்பதில், உங்களுக்கு ஐயம் இருக்க வாய்ப்பு இல்லை. அதேபோல், நமது காகிதப் பணத்தை பலமுறை மடிக்கிறோம், சுருட்டுகிறோம், எழுதுகிறோம், கறைபடுத்துகிறோம்; இருந்தும் அவை நீண்ட நாட்களுக்கு இருக்கின்றன. காகிதப் பணத்தை எளிதாக ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்லலாம். பல அலகுகளாகப் பிரிப்பதற்கும், நமது பணம் எளிதானது. அரசு இந்த காகிதப் பணத்தையும், உலோக நாணயங்களையும் சட்டரீதியாக பணம் என்று கூறியதால், அவற்றை எல்லோரும் பணம் என்று ஏற்றுக்கொண்டனர். அரசு அல்லது அரசு நிறுவனம் பணத்தை வெளியிடுவதால், பணத்தின் அளவு எப்போதும் குறிப்பிட்ட அளவே இருக்கும். இப்படி பணத்தின் ஐந்து முக்கிய தன்மைகளைக் கொண்டதாக, நமது காகிதப் பணம் மற்றும் உலோக நாணயங்கள் இருக்கின்றன. இப்படித்தான், மதிப்பில்லாத காகிதப் பணமும், உலோக நாணயமும் பணமாக மாறியது” என்று காகிதப் பணத்தின் தன்மையை விளக்கினார் ஆசிரியர் சமூகமணி.

Comments