தக்காளி இல்லாட்டி உருளை, உருளை இல்லாட்டி பீன்ஸ்!
‘நீரிழிவு குறைபாடு உள்ளவர்களின் மருந்தான இன்சுலினை வாங்க, நாளொன்றுக்கு 130 ரூபாய் செலவாகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை 2௩0 ரூபாயாக விலையேற்றம் செய்யப்பட்டாலும், அதன் தேவை குறையாமல் அப்படியே உள்ளது. மறுபுறம், தக்காளியின் விலை, கிலோவுக்கு 35 ரூபாயிலிருந்து 70 ரூபாயாக ஏறினால் என்ன நடக்கிறது? தக்காளியின் தேவை சர்ரென்று வீழ்ந்துவிடுகிறது. ஏன் இந்த முரண்பாடு?’ என்று புதிர் போட்டார் பாலு.
‘ஆமாம் சார். இந்தச் சந்தேகம் எனக்கும் வந்ததுண்டு. பொருளின் விலையேற்றம் என்பது, அதன் தேவையைக் குறைக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், விலை மாற்றம் ஏன் எல்லாப் பொருட்களிலும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை?’ என்று பதில் கேள்வி கேட்டான் கார்த்திக்.
‘தக்காளி இல்லை என்றால், உருளை; உருளை இல்லாவிட்டால் பீன்ஸ். எது மலிவாக இருக்கிறதோ அதை வாங்குவோம். ஆனால், இன்சுலின் அப்படியில்லையே. அதற்கு மாற்று இல்லையே’ என்றாள் சிந்துஜா.
‘சரியாகச் சொன்னாய். இதுதான், தேவை நெகிழ்ச்சி (Elasticity in demand) கோட்பாடு. விலை மாறும்போது, தேவையின் அளவும் மாறும் என்பது தேவை விதி (Law of Demand) கோட்பாடு. ஆனால், விலை மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்படும் தேவை மாற்றம் எவ்வளவு இருக்கும் என்பதை கணிதரீதியாக அறிய உதவும் கோட்பாடு தான் ‘தேவை நெகழ்ச்சி’ ஆகும்.
மேற்சொன்னபடி, இன்சுலின் விலை 80 சதவீதம் கூடினால், அவற்றின் தேவை 80 சதவீதம் குறையும் என்று சொல்ல முடியாது. உப்பின் விலை 10 சதவீதம் குறைந்தால், அதன் தேவை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று கூற முடியாது. பொருளை பொறுத்துத்தான் விலைமாற்றத்தின் தாக்கம் அமையும்,’ என்றார் பாலு சார்.
‘ஆமாம், இது இன்னும் தெளிவாக இருக்கிறதே’ என்று ஆச்சரியப்பட்டான் கார்த்திக். ‘பொருட்களின் நெகிழ்வுத்தன்மைக்குக் காரணம் என்ன?’ என்று கேட்டாள் சிந்துஜா.
‘பொதுவாக, ஒரு பொருளுக்கு மாற்றுகள் இருந்தால், அதன் தேவையில் நெகிழ்வுத்தன்மை இருக்கும். லெதர் பையின் விலை கட்டுபடியாகாவிட்டால், ரெக்சின் வகை பைக்கு மாறிவிடுவேன். டீ விலை ஏறினால், நாளொன்றுக்கு 5 டீக்கு பதிலாக 2 டீயாக சுருக்கிக் கொள்வேன். செய்தித்தாள் விலை கூடினால், இணையத்திலேயே செய்தியைப் படித்துவிடுவேன். முந்திரியின் விலை கையைக் கடித்தால், நிலக்கடலையோடு நிறுத்திக்கொள்வேன். ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றுக்கு மாற எனக்கு கதவுகள் திறந்துள்ளன. இதுபோன்ற பொருட்களில் அதிகத் தேவை நெகிழ்ச்சி இருக்கும். எனவே, அவற்றில் செய்யப்படும் விலை மாற்றம், அதன் தேவையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், மாற்று வழிகள் குறைவாக உள்ள பொருளில், தேவை மாற்றம் குறைவாக இருக்கும்,’ என்றார் பாலு சார்.
‘மாற்றுகள் குறைவாக உள்ள பொருள் என்றால் என்ன?’ என்று கேட்டான் கார்த்திக்.
‘மின்சாரம், பால், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற பொருட்களுக்கு மாற்றுகள் குறைவு. என்ன விலை என்றாலும், பல்லைக்கடித்துக் கொள்ள வேண்டியதுதான். இவற்றின் தேவை குறைவதில்லை. இதை Inelasticty ‘தேவை நெகிழ்வின்மை’ பொருட்கள் என்கிறார்கள்.
இதே ஆடம்பரப் பொருட்களின் விலை குறைந்தால், அதன் தேவை, கூட வாய்ப்புள்ளது அல்லது விலை கூடினால் தேவை குறையவும் வாய்ப்புள்ளது. உதாரணத்துக்கு கார், போன், தொலைக்காட்சி, லேப்டாப், தங்கம் போன்றவற்றைக் கூறலாம்.
பொருளின் விலையை ஏற்றலாமா குறைக்கலாமா, அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிய, இது பெரிதும் உதவும். அரசாங்கம் வழங்கும் மானியம், கடைகளின் ஆடித் தள்ளுபடி, அதிரடித் தள்ளுபடி, சிகரெட் விலையேற்றம், வரிவிதிப்பு போன்ற பலவற்றிலும் இதன் பயன்பாடு உள்ளது. அடுத்த வாரம் இதை எப்படி கணக்கிடலாம் என்று பார்க்கலாம்’ என்று முடித்தார் பாலு சார்.
எல்லோருக்கும் ஆடம்பரம் ஒன்றா?
ஆடம்பரப் பொருட்களில் நெகிழ்வுத்தன்மை அதிகம் இருக்கும் என்று பார்த்தோம். ஆனால், அதிலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம், எல்லோருக்குமே ஆடம்பரம் என்பது ஒன்றல்ல. அது கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து மாறுபடும். காபி சிலருக்கு காலையில் எழுந்ததும் அத்தியாவசியம். நெருக்கம் மிகுந்த நகரத்தில் வாழ்பவருக்கு குளிரூட்டி சாதனம் முக்கியமாக இருக்கலாம். அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு கார் அத்தியாவசியம். ஒருவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், வாழ்க்கை முறையை பொறுத்தே பொருள் தேவையில் மாற்றம் இருக்கும்.
காலம் செய்யும் கோலம்:
காலம் என்ற காரணியும், பொருள் தேவையின் நெகிழ்வுத்தன்மையில் முக்கிய தாக்கம் செலுத்துகிறது. பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருட்களில் விலை ஏற்றம் நிகழ்ந்தால், உடனடியாக தேவை குறையாமல் இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் இதற்கு விளைவு இருக்கும். உதாரணத்துக்கு, கார் ஓட்டுபவர், பெட்ரோல் விலை கட்டுபடியாகாமல், பைக்குக்கு மாற வாய்ப்புள்ளது. பைக்கில் செல்பவர், நாளடைவில் பஸ், ரயில், ஷேர் ஆட்டோ போன்ற பொதுப் போக்குவரத்தை நாடக்கூடும். இன்னும் பலர், போக்குவரத்துச் செலவை குறைக்க முடிவுசெய்து, அலுவலகத்துக்கு பக்கத்திலேயே குடிபெயரத் திட்டமிடலாம்.



Comments
Post a Comment