ஆல்ஃபிரட் மார்ஷல் பொறுப்புள்ள ஆசான்



இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ஃபிரட் மார்ஷல் என்ற அறிஞரே, ‘தேவை நெகிழ்ச்சி’ அளவிடும் சூத்திரத்தைக் கொடுத்தார். தேவை நெகிழ்ச்சி என்ற கருத்து புதிதாக இருந்தாலும், எல்லாருமே ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில் அதனைச் சொன்னார். மார்ஷல் செய்த பொருளாதார பங்களிப்புகளிலேயே, ஆகச் சிறந்தது, ‘தேவை நெகிழ்ச்சி’ கோட்பாடு என்று பிரபல பொருளியல் அறிஞர் கெயின்ஸ் கூறினார்.

மார்ஷலுக்கு மதக்கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். இதனால், தொன்மை இலக்கியங்களை படிக்க வேண்டும் என்று மார்ஷ ைல வற்புறுத்தினார். ஆனால், மகனுக்கோ கணிதத்தில் ஆர்வம். தெருவில் போய்க்கொண்டிருக்கும் போதே, கடினமான யூக்லிட் (Euclid) சூத்திரங்களுக்கு, மனக்கணக்கில் விடை கண்டுபிடிப்பது மார்ஷலுக்கு விருப்பமான ஒன்று. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய மார்ஷல், நாட்டின் வறுமையை ஒழிப்பதில் ஆர்வம் காட்டினார். அதுவே, அவரை பொருளியல் துறையின் பக்கம் ஈர்க்க காரணமாகவும் அமைந்தது.


‘வாழ்க்கையின் நோக்கத்தை ஆய்வது பொருளாதாரம் அல்ல; பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றி மட்டுமே அது பேச வேண்டும். ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஏற்படும் சமூகப் பிரச்னைகளை ஆய்வு செய்து, அதைத் தீர்த்துவைக்க முயலும் ஒரு நடைமுறைப் படிப்பே பொருளாதாரம்’ என்றார் மார்ஷல்.

பொருளின் விலையைவிட அதிக பயன்பாட்டை அடைந்ததை விளக்கும் ‘நுகர்வோர் எச்சம்’, பதிலீட்டு விதி, நுகர்வோர் உபரி, சந்தை சமநிலை போக்கினை அறியும் ‘சந்தையில் நேரத்தின் அம்சம்’ போன்றவை மார்ஷலின் முக்கிய பங்கு. பொருளாதாரம் ஓர் அறிவியல் எனும் கருத்தை நிறுவிய மார்ஷலின் நூல்களில் சிறந்தவை மூன்று: ‘பொருளாதார தத்துவங்கள்’, ‘ தொழிலும் வாணிபமும்’, ‘பணம், கடன், வணிகம்’ .


‘பொருளின் தேவை (Demand) மற்றும் அளிப்பு (Supply) எதிர்எதிர் துருவங்கள்தான். ஆனால், ஒரு கத்திரிக்கோலின் இரு தகடுகள் எதிர் எதிர் திசையில் இயங்கினால் தான் காகிதத்தை வெட்ட முடியும். அதுபோலவே, தேவையும், அளிப்பும் இயங்கினால்தான் சந்தையில் சமநிலை உருவாகும்’
↔– மார்ஷல்

Comments