கைதிகளின் குழப்பம்
சந்தையில், இரு நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து அதிக லாபம் பெற வழி இருந்தும், போட்டி போடுவது எதனால்? இதைப் புரிந்துகொள்ள ‘கைதிகளின் குழப்பம்’ (Prisioner's Dilemma) கோட்பாடு உதவுகிறது. இந்தக் கருத்து, பொருளாதாரம் மட்டுமின்றி, சமூகவியல், உலக அரசியல் என்று பல துறைகளிலும் பயன்படுகிறது. 1950ல், அமெரிக்காவைச் சேர்ந்த மெர்ரில் ஃபிளட் மற்றும் மெல்வின் டிரஷர் ஆகியோர், இந்தக் கோட்பாட்டை முன்வைத்தனர்.
சுப்பையா, ஒரு கொள்ளை வழக்கில் போலீசிடம் சிக்கிக்கொள்கிறான். அவனது கூட்டாளியான விவேக்கும் மாட்டிக்கொள்கிறான். இருவரும் தனித்தனி சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். இருவருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை.
போலீசாருக்கு ஒரு சந்தேகம். 3 மாதங்களுக்கு முன் நடந்த, எல்.வி.எஸ். நகைக்கடை கொள்ளையிலும் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம்; அதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது என்று சந்தேகப்படுகிறார்கள். இவர்கள் அதைச் செய்திருக்கலாம் என்று போலீசாரால் யூகிக்க முடிந்தாலும், நீதிமன்றத்தில் நிரூபிக்க, போதிய ஆதாரங்கள் இல்லை.
இதையடுத்து, போலீஸ் விசாரணை அதிகாரி, இருவரையும் தனித்தனியே சந்திக்கிறார். முதலில், சுப்பையாவை பார்த்து போலீஸ், “வங்கிக் கொள்ளையை நீங்கள்தான் செய்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். சுப்பையா, நீ அதில் அப்ரூவராக மாறிவிட்டால் (குற்றத்தை ஒப்புக்கொண்டால்) உனக்குத் தண்டனை கிடையாது. விவேக்குக்கு 10 வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கும். ஒருவேளை, நீ அதை ஒப்புக்கொள்ள மறுத்து, விவேக் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவனுக்குச் சிறைத் தண்டனை கிடையாது. ஆனால், உனக்கு 10 வருடங்கள் கிடைக்கும். நீங்கள் இருவருமே ஒப்புக்கொண்டால், உங்களுடைய தண்டனை பாதியாக்கப்பட்டு, ஆளுக்கு 5 வருட சிறைத் தண்டனை கிடைக்கும். இருவருமே மறுத்துவிட்டால், வெறும் 1 வருட தண்டனையோடு தப்பித்துவிடுவீர்கள்” என்று சொல்கிறார்.
இதே விஷயத்தை, விவேக்கிடமும் போலீஸ் அதிகாரி கூறுகிறார். இப்போது சிந்தித்து பாருங்கள். எந்தத் திருடனும் தப்பிக்கத்தான் பார்ப்பான். அந்த வகையில், இருவருமே குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல், சாதாரண கொள்ளை வழக்கின் தண்டனையை மட்டும் அனுபவித்துவிட்டு போவதுதான் அவர்களுக்கு புத்தசாலித்தனமாக முடிவாக இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை. இங்குதான், நாஷ் சமநிலை (Nash Equilibrium) கோட்டுபாடு வேலை செய்கிறது.
தாம் குற்றத்தை மறுத்து, தண்டனையைக் குறைக்க நினைத்தாலும், கூட்டாளியும் அப்படியே இருக்க வேண்டுமே. மாறாக, கூட்டாளி எந்த முடிவை மேற்கொள்வான் என்று சுப்பையா திருடனுக்கு தெரியாது. ஒருவேளை விவேக் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அதேசமயம் சுப்பையா மறுத்திருந்தால் இவனுக்கு அதிகபட்ச சிறைத்தண்டனை கிடைக்கும். எனவே, ஒப்புக்கொள்வதுதான் தனக்கு பாதுகாப்பானது என்று இரு திருடர்களும் தனித்தனியே நினைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. தாம் ஒப்புக்கொண்டு, மற்றொருவர் மறுத்தால், தனக்கு தண்டனை இல்லை. அடுத்தவனுக்குத்தான் பாதிப்பு அதிகம். தான் ஒப்புக்கொண்டு, மற்றவனும் ஒப்புக்கொண்டால், இருவருக்கும் பாதி தண்டனைதான். எனவே, ஒப்புக்கொள்வதே சிறந்தது என்று இருவரும் தர்க்கரீதியாக முடிவுக்கு வருவார்கள். இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மிகக்குறைந்த தண்டனையோடு தப்பித்துவிடலாம்தான். ஆனால், எதிராளியும் அப்படி செய்வார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எனவே, சுயநலத்தை முன்னிறுத்திய பகுத்தறிவால், ஒத்துழைப்பு சாத்தியம் இல்லாமல் போகிறது.
இதை இப்போது சந்தை நிறுவனங்களோடும் பொருத்திப் பாருங்கள். பல நிறுவனங்கள், பொருட்களின் விலை விஷயத்தில் ஒன்று சேர்ந்து விலை ஏற்றுவதன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும். அல்லது, பொருளின் விலையை ஒரு குறிப்பிட்ட அளவிலேயே தொடர்ந்து தக்க வைத்து லாபம் சம்பாதிக்கலாம். ஆனால், பெரும்பாலும் அத்தகைய ஒத்துழைப்பு நீண்ட காலம் சாத்தியம் இல்லை என்பதால், அப்படி செய்வதில்லை. போட்டி இருந்துகொண்டே இருக்கிறது. இதைப் புரிந்துகொள்ள, கைதிகளின் குழப்பம் உதவுகிறதல்லவா!
ரோஷன் செல்வரத்தினம்

Comments
Post a Comment