உலகமயமாக்கல் நன்மையா தீமையா?
அறிஞர்கள், பண்டிதர்கள் ஏதாவது பிரச்னை குறித்து பேசும்போது, ‘உலகமயமாக்கம்’ சமூக அமைப்பிலே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்று கூறுவார்கள். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அது என்னவென்று புரியாமலேயே தலையாட்டி வைப்போம். உண்மையில், உலகமயமாக்கல் என்பது புரிந்துகொள்ள எளிமையானதுதான்.
தொழில்நுட்ப வளர்ச்சியால், உலக மக்களுக்கு இடையேயான தொடர்பு அதிகரித்துள்ளது. உலகின் எல்லா இடங்களும், விரைவான போக்குவரத்தால் இலகுவாக இணைக்கப்பட்டுள்ளன. கப்பலில் இரண்டு மாதங்கள் கடக்க வேண்டிய இடத்தை, 5 மணி நேர விமானப் பயணத்தின் மூலம் கடந்து விட முடியும். இணைய வசதியின் வளர்ச்சி காரணமாக, ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வது மிகவும் எளிதாகி இருக்கின்றது. இத்தகைய மாற்றங்களால், உலக மக்களுக்கு இடையே இருந்த இடைவெளி வெகுவாக குறைந்துள்ளது. இந்த சூழலை வணிகத்துக்கு சாதகமாக பயன்படுத்துவதை, ‘பொருளாதார உலகமயமாக்கல்’ (Economic Globalisation) என்கிறார்கள். உலகமயமாதலை முதலில் பொருளாதாரத்தோடு சம்பந்தப்படுத்தியது, தியோடர் லெவிட் எனும் அறிஞர். அவர், 1981ல் எழுதிய ‘உலகமயப்படும் சந்தை’ எனும் புத்தகங்கள் இதுதொடர்பான கருத்தை முன்வைத்தார். சொல்லப்போனால், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு சென்று வணிகம் செய்யும் வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாகவே, இருந்து வருகிறது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில், அதன் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு சென்று வணிகம் செய்வதற்கு வசதியாக, அந்நிய நாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள வணிகக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை நீக்க வேண்டும்; யாரும் எங்கு சென்றும் எளிதாக முதலீடும், வணிகமும் செய்ய முடியும் என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்பதே பொருளாதார உலகமயமாக்கலின் முழக்கமாகும். இந்த புதிய பொருளாதார உலகமயத்திற்கு நன்மை மற்றும் தீமை இரண்டுமே இருக்கிறது.
உலகமயமாக்கலில் நன்மைகள்
1) ஏழை மற்றும் வளரும் நாடுகளிலே குறைந்த ஊதியத்திற்கு ஊழியர்கள் கிடைப்பார்கள். ஆனால், அவர்களிடம் தொழில் தொடங்க போதுமான முதலீடுகள் இல்லாமல் இருக்கும். இதைப் பயன்படுத்திக்கொள்ளும் சர்வதேச கம்பெனிகள், அங்கு முதலீடுகள் செய்து, புதிய நிறுவனங்களைத் திறக்கும். இதனால், ஏழை நாடுகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் கிடைக்கும் ; வேலைவாய்ப்புகள் உருவாகும். பணக்கார நாடுகளுக்கு குறைந்த விலையிலே பொருட்கள் கிடைக்கும்.
2) தயாரிப்பு நிறுவனங்களுக்கு, உள்ளூரில் மட்டும் சந்தை என்றில்லாமல், உலகம் முழுவதுமே சந்தை என்ற வாய்ப்பு உருவாகிறது. இதனால், எந்த நாட்டுப் பொருளையும் எங்கும் விற்கவும், வாங்கவும் முடியும்.
3) இருநாட்டு வணிக உறவுகளால், இருநாட்டு கலாச்சாரங்களையும் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
4) ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மை வளர்ந்து, ‘ஒரே உலகம்’ என்ற எண்ணம் மக்களிடையே உருவாகிறது.
உலகமயமாக்கலின் தீமை
!) உலகமயமாக்கல் கொள்கை கேட்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும், வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளுக்கே நடைமுறையில் நன்மைகள் அதிகம் கிடைக்கின்றன. 1960லிருந்து 1998 வரை நடந்த வேகமான உலகமயமாக்கலால், பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஐ.நா., வளர்ச்சி நிரல் அறிக்கையின்படி, வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் உள்ள 20 % பணக்காரர்களே, உலகின் 86 சதவீத வளத்தை பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு 14 சதவீத வளத்தையே அணுகும் வாய்ப்பு கிடைக்கிறது. உலகமயமாக்கலால், பெரும் பணக்காரர்களே பெரும்பாலும் பயனடைகின்றனர்.
2) வளரும் நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. அதன்மூலம் அவர்கள் அடைகிற லாபத்தை ஒப்பிட்டால், உள்ளூர் தொழிலாளர்களோ, அரசோ அடைகிற லாபம் மிகமிகக் குறைவு.
3) பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள், தொழிலாளர்களுக்கு அடிமாட்டு ஊதியத்தையும், மோசமான வேலை சூழலையும் வழங்குவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும், சுற்றுப்புற சூழல் குறித்தும் அக்கறை இல்லாமல் நடந்துகொள்ளும் போக்கும் நிலவுகிறது.
4) பன்னாட்டு கம்பெனிகள், வணிக நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுவதில்லை. அவர்களின் பொருளாதார பலத்தை பயன்படுத்தி, உள்நாட்டு அரசியல் முடிவுகளிலும் தலையடுகின்றனர். தங்களுக்கு லாபம் தரும் வகையில், வரிக்குறைப்பு, சலுகைகள் போன்றவற்றை அரசிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். இதனால், அரசு அதிகாரிகளிடம் ஊழல் அதிகமாகிறது.
5) கார்ப்பரேட் நிறுவனங்களோடு போட்டி போட முடியாமல், இந்திய சுதேசி நிறுவனங்கள் பலவும் மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றன.
-ரோஷன் செல்வரத்தினம், பொருளியல் ஆய்வாளர்
மூலதனம் எங்கு அதிகமாக குவிந்து இருக்கிறதோ, அங்கிருந்து அதனைப் பெற்று மனிதவளம் எங்கு அதிகமாகவும் செலவு குறைவனதாகவும் இருக்கிறதோ அங்கு உற்பத்தி செய்து, பொருள்களுக்கு எங்கு சந்தை அதிகமாக இருக்கிறதோ, அங்கு விற்பனை செய்வதுதான் உலகமயமாதல். இங்கு நாடுகளுக்கு இடையேயான எல்லைக்கோடுகள் அழிந்துபோகின்றன. -
---உலகமயம் குறித்து இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி

Comments
Post a Comment