வட கொரியா தென் கொரியா சொல்லும் பாடம்



பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல நிறுவனங்கள் எப்போதுமே முக்கியம். இதற்கு இயற்கையாய் அமைந்த உதாரணம்தான் வட கொரியா மற்றும் தென் கொரியா. 1944ல், இந்த இரண்டு நாடுகளும் ஒன்றாகத்தான் இருந்தன. அவர்கள், ஒரே மக்கள், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே வரலாறு, ஒரே பொருளாதார நிலைகொண்ட மக்களாக இருந்தனர். 1945ல் கொரியா, வடக்கு மற்றும் தெற்கு என்று இரண்டு நாடுகளாகப் பிரிந்தன. வட கொரியா கம்யூனிசத்தைத் தேர்ந்தெடுத்தது. அதாவது, சர்வாதிகார ஆட்சிமுறை. பொருளாதாரத்தை அரசே திட்டமிடும். தனியார் சொத்துரிமை கிடையாது. தனியாகத் தொழில் தொடங்க முடியாது. கருத்து சுதந்திரம் இல்லை.

மறுபுறம் தென் கொரியா முதலாளித்துவ முறையைத் தேர்வு செய்தது. தனியார் சொத்துரிமை, தொழில் தொடங்கும் உரிமை, சந்தைப் பொருளாதாரம், கருத்து சுதந்திரம் எல்லாம் உண்டு. இரண்டு நாடுகளும் பிரிந்து, 70 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இரண்டு வெவ்வேறு முறையிலும் விளைந்த பலன்கள் என்ன? விண்வெளியில் இருந்து பார்த்தாலே இரண்டு நாடுகளின் நிலைமையையும் நன்கு புரிந்துகொள்ளலாம்.

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தைப் பாருங்கள். கொரிய தீபகற்பத்தில், ஒரு பகுதி இருட்டாகவும், மறுபகுதி நன்கு வெளிச்சத்தோடும் இருக்கும். வெளிச்சத்தோடு இருக்கும் பகுதி, தென் கொரியா. இருட்டாகக் காணப்படும் பகுதி, வட கொரியா. ஒரே தீபகற்பத்தில், ஒரு துண்டு மட்டும் கற்கால பகுதி போல இருக்கிறதே ஏன் என்பது விண்வெளி விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால், பொருளியல் ஆய்வாளருக்கு இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. காரணம், நல்ல நிறுவனத்தால் தான், நல்ல பொருளாதார வளர்ச்சியைத் தர முடியும்.

கம்யூனிசத்தைத் தேர்வு செய்த நாட்டில், பொருளாதாரத்திற்கு உகந்த நிறுவனங்கள் இல்லை. போட்டி இல்லை, உழைப்புக்கு வெகுமதி இல்லை, கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை. இதனால், பொருளாதார வளர்ச்சி முடங்கியது. மாறாக, தென் கொரியாவில் மக்களின் சொத்துரிமையைப் பாதுகாக்கும் நிறுவனம் இருக்கிறது.

மக்கள் எதையும் வாங்கலாம், விற்கலாம். அதில் கிடைக்கும் லாபத்தை வைத்துக்கொள்ளலாம். அதனால், பெரிய அளவில் முன்னேற்றம் காணப்படுகிறது. இரவைப் பகலாக்கும் அளவுக்கு, அவர்களுக்கு மின்சார சப்ளை கிடைக்கிறது. உலகின் முன்னேறிய நாடுகளின் பட்டியலில், தென் கொரியா உள்ளதோடு, மக்களின் வாழ்க்கைத்தரம் மேற்கு நாடுகளின் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

வட கொரியா முழுக்க, ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பலரும் பசி பட்டினியில் வாடி வருகின்றனர். சரியான நிறுவனம் அமைந்துவிட்டால், சில பத்தாண்டுகளில் பெரும் பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதற்கு வட கொரியாவும், தென் கொரியாவும் உதாரணங்களாய் உள்ளன.

↔– ரோஷன் செல்வரத்தினம்

Comments