பணவீக்கம் ஏன் ஏற்படுகிறது?



கார்த்திக் கேட்டான், “பணவீக்கம் என்று அடிக்கடி சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன சார்?”

ஆசிரியர் பாலு, தன் கதையில் இருந்தே ஆரம்பித்தார். “எனக்கு மாதச் சம்பளம் 40 ஆயிரம். ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன், இதே ஆசிரியர் பணிக்குச் சம்பளம் 400 ரூபாய். தற்போது இதை ஒப்பிட்டால், எனக்கு நூறு மடங்கு சம்பளம் உயர்ந்திருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தில், குடும்பத்துக்குத் தேவையான மளிகைச் சாமான், உடை, வாடகை, போக்குவரத்துக்கு ஆகும் செலவுகள் 300 ரூபாய்க்குள் அடங்கிவிடும். இன்றைய நிலையில், அதே தேவைகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் இருந்தாலும் போதுமானதாக இல்லை. இதுதான் பணவீக்கம்.” என்றார் பாலு.

“ஏன் இப்படி, புரியவில்லையே” என்றாள் சிந்துஜா.

“பணவீக்கம் என்பது, அதிக பணம், குறைவான பொருள் என்ற காரணத்தால் வருவதாகும். புரியும்படி சொல்கிறேன் கேள். 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒருவனுக்கு, கம்பெனியில் 40 ஆயிரம் ரூபாயாக சம்பளத்தை உயர்த்தினால், அவனிடம் எவ்வளவு பணம் கூடுதலாக இருக்கும்?” என்று கேட்டார் பாலு.

“20 ஆயிரம் பணம் கூடுதலாகச் சேரும்” என்று சொன்னான் கார்த்திக்.

“சரி, அந்தப் பக்கம் சம்பளம் உயரும்போது, இந்தப் பக்கம் அவன் குடியிருக்கும் வீட்டின் வாடகை, 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக வீட்டு உரிமையாளர் உயர்த்திவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். மறுபுறம், மின்கட்டணம் உயர்கிறது, கேஸ் மானியத்தை அரசு ரத்து செய்துவிடுகிறது, தக்காளியின் விலை 100 ரூபாயைத் தாண்டிவிடுகிறது. ஜி.எஸ்.டி.,யால் பொருட்களின் விலை 20 சதவிகிதம் அதிகரித்துவிடுகிறது. இதனால், அவனுக்குக் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இப்போது அவன் கையில் எவ்வளவு மிச்சம் இருக்கும்?” என்று புதிர் போட்டார் பாலு சார்.

கொஞ்சம் யோசித்த சிந்துஜா, “இப்போது, எதுவுமே மிஞ்சாது” என்றாள்.

“இதுதான் பணவீக்கம். அவன் சம்பளம் இருமடங்கு உயர்ந்தாலும், பொருட்களை வாங்கும் சக்தி கூடவில்லை. அதே வீடு, அதே அளவு தக்காளி, அதே கேஸ். ஆனால், அதற்குக் கொடுக்கும் விலை மட்டும் முன்பைவிட இப்போது அதிகம். இதைத்தான் பணவீக்கம் என்கிறார்கள்.” என்றார் பாலு.

“ஆமாம் சார், ஒரு ரூபாய்க்கு வாங்கிய கடலை மிட்டாயை, இப்போது 5 ரூபாய் கொடுத்து வாங்குகிறேன். ஆனால், மிட்டாய் அளவு அதேதான்” என்றான் கார்த்திக், ஏதோ புதிதாய் கண்டுபிடித்துவிட்டது போல்.

“சரி ஏன் பணவீக்கம் ஏற்படுகிறது” என்று ஆர்வமாய் கேட்டாள் சிந்துஜா.

“இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது: பொருள் விலையேற்றம். மூலப்பொருட்களின் விலை கூடுவதால் ஏற்படுவது. உற்பத்திக்கு அடிப்படையான பெட்ரோல், தாதுக்கள், மரங்கள் போன்ற பொருட்களின் தேவை கூடும்போது, அதன் விலை கூடும். அதனால், இயல்பாகவே அதைச் சார்ந்துள்ள மற்ற பொருட்களின் விலையும் ஏறும். அதேபோல், தொழிலாளர்களின் சம்பளம் கூடும்போது, அதை ஈடுகட்ட பொருட்களின் விலையைக் கூட்டும் அவசியம், முதலாளிக்கு ஏற்படும். மேலும், நிலத்தின் விலை, வாடகை ஏறும்போதும், பொருட்களின் விலை ஏறும். இது முதலாவது வகை” என்றார் பாலு.

“இரண்டாவது: தேவையை ஈடுகட்ட முடியாதபோது ஏற்படும் விலையேற்றம். ஓர் ஊரில் 100 குடும்பங்கள் இருக்கின்றன. 200 வீடுகள் இருக்கின்றன என்றால், வீட்டின் விலை குறைவாக இருக்கும். இப்போது, குடும்பங்களின் எண்ணிக்கை பெருகி 400 ஆக அதிகரிக்கிறது; ஆனால், வீட்டின் எண்ணிக்கை அதே அளவுதான் இருக்கிறது என்றால் என்ன ஆகும்? வீட்டு வாடகை, நிலத்தின் விலை பல மடங்கு அதிகரிக்கும்.

அதேபோல், அரசு வட்டி விகிதத்தைக் குறைக்கும்போதும் விலை ஏற்றம் ஏற்படும். கார் லோனுக்கான வட்டியை அரசு குறைத்தால், மக்கள் கடன் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். அதாவது, கார் வாங்க சக்தியற்றவர்களும், இப்போது கார் வாங்க போட்டி போடுவார்கள். இதனால், காரின் விலை தானாக உயரும். சுருக்கமாகச் சொன்னால், பணம் அதிகம், பொருள் குறைவு என்ற நிலை ஏற்படுகிறது.

மூன்றாவது: அரசு அதிக அளவு பணத்தை அச்சிடுவது. அதனால், மக்கள் கையில் அதிகம் பணம் புழங்கும். ஆனால், பொருட்களின் உற்பத்தி கூடவில்லை என்றால், பணத்துக்கு மதிப்பில்லாமல் விலை ஏற்றம் ஏற்படும்.” என்றார் பாலு சார்.

“ஓ! இவ்வளவு விஷயம் இருக்கிறதா? இதைக் கட்டுப்படுத்த முடியாதா?” என்றான் கார்த்திக்.

“கண்டிப்பாக கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உலகின் எல்லா அரசாங்கமும், பணவீக்கத்தைக் கண்கொத்தி பாம்பாகக் கண்காணித்து வருகின்றன. பொருட்களின் விலை ஏறும் அதேசமயம், மக்களின் சம்பளமும் அதைவிட உயர்த்தப்பட வேண்டும். விலை மட்டும் ஏறிக்கொண்டிருந்தால் ஆபத்துதான். எனினும், பணவீக்கம் சில வகைகளில் நல்லது செய்யும். அதை எப்படி என்று அடுத்தவாரம் சொல்கிறேன்.” என்று முடித்தார் பாலு.

Comments