பொதுவின் துயர் ( Tragedy of the commons )



சரவணனும், முருகனும் ஒரே ஊரில் வசிப்பவர்கள். இருவருக்கும், சொந்தமாக குளங்கள் உள்ளன. சரவணனின் குளத்தில், அவ்வப்போது மீன் பிடித்து அதை விற்பனை செய்வது வழக்கம். அதே போல்தான், முருகனும். இவர்களின் குளங்களுக்கு நடுவே ஒரு பொதுக்குளம் உண்டு. சரவணன் மற்றும் முருகன், தங்கள் குளத்தில் மீன்பிடிக்கும் அணுகுமுறையும், பொதுக்குளத்தில் மீன்பிடிக்கும் அணுகுமுறையும் ஒரே மாதிரி இருக்குமா?

பெரும்பாலும் அப்படி இருக்காது என்பதே உண்மை. இதை பொதுவின் துயர் என்கிறார்கள் பொருளியல் அறிஞர்கள். முருகனோ, சரவணனோ தங்கள் குளத்தில் மீன்பிடிக்கும் போது மிகவும் கவனமாக இருப்பார்கள். குளத்தில் நூறு மீன்கள் இருக்கிறது என்றால், எல்லாவற்றையும் பிடித்து விடமாட்டார்கள். அப்படி ஒட்டுமொத்த மீன்களையும் துடைத்தெடுத்துவிட்டால், மறுபடியும் மீன்கள் உற்பத்தியாகாது என்று அவர்களுக்குத் தெரியும். பொறுப்புணர்வோடு செயல்படுவார்கள். ஆனால், பொதுக்குளத்தில் அப்படி நடக்காது. தனிநபருக்கு சொந்தமான குளத்தில் பிடிக்கப்படும் மீன்களை விட, மிக அதிக எண்ணிக்கையிலேயே மீன்கள் பிடிக்கப்படும். ‘பொதுக்குளத்தில் நான் அதிக மீன்களை பிடிக்காவிட்டாலும், முருகனோ வேறு யாரோ அதை பிடிக்கத்தான் போகிறார்கள்’ என்று கூறி தன் செயலை நியாயப்படுத்துவார் சரவணன். இதே நியாயத்தை முருகனும் சொல்லி அதிக மீன்களைப் பிடிப்பார். இதனால், விரைவிலேயே மீன்கள் இல்லாமல் போகும். அதாவது, தனிநபருக்கு சொந்தமான சொத்தும், பொது சொத்தும் ஒரே மாதிரியாக பாவிக்கப்படுவதில்லை. பொதுசொத்தில் கிடைத்தவரை லாபம் என்றே தனிநபர்கள் செயல்படுவார்கள். அவர்கள், பொதுநன்மையை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு செயல்படுவதில்லை. இதைத்தான், பொதுவின் துயர் என்று அழைக்கிறார்கள். காரட் ஹார்டின் ( Garrett Hardin) என்ற பொருளியல் அறிஞர், 1968ல் இதுதொடர்பான விரிவான ஆய்வை மேற்கொண்டு, Tragedy of the commons என்ற அறிக்கையை சமர்பித்தார். அதில், பொதுவான மேய்ச்சல் நிலம் எவ்வளவு விரைவாக மொட்டையடிக்கப்படுகிறது என்ற உதாரணத்தின் மூலம், இந்த கருத்தை விளக்கினார்.

இதற்கு தீர்வு என்ன?

அனுமதி முறை தான் தீர்வாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. யார் வேண்டுமானாலும் பொதுக்குளத்தில் மீன்பிடிக்க முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது. அரசே, அதை ஒழுங்குமுறைப்படுத்தி, இன்னார் தான் அதை பயன்படுத்த வேண்டும் என்று அனுமதி அளிக்கும். அவர்கள் மட்டும்தான், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு குளத்தின் வளங்களை பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், பொதுசொத்துகள் பொறுப்பற்ற முறையில் சூறையாடப்படுவதை தடுக்க முடியும். காடு, கடல், நதி, கனிமம் என்று பலவற்றிலும் இந்த ஒழுங்கு முறை பின்பற்றப்படுகிறது.




ரோஷன் செல்வரத்தினம்

Comments