சாமானியர்களுக்கு கைகொடுக்கும் மானியம்!



உதாரணத்துக்கு, ஒருவர் ஹோட்டல் வைத்து நடத்துகிறார். அதில், தோசை தயாரிக்க ஆகும் அடக்கவிலை 15 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். மக்கள் அதிகம் சாப்பிடும் உணவுப் பொருளாக இருப்பதால், விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று அரசு கருதுகிறது. 10 ரூபாய்க்கு தோசையை விற்பனை செய்யுங்கள் என்று சொன்னால், கடை முதலாளி என்ன ஆவார்? அவருக்கு கட்டுபடியாகாது. எனவே, அவருடைய இழப்பைச் சரிக்கட்ட அரசு, அவருக்கு 5 ரூபாய் கொடுத்துவிடும். பொதுமக்களுக்கு தோசை 10 ரூபாய்க்கு கிடைக்கும். இப்போது, அரசு தோசைக்காக 5 ரூபாய் மானியம் கொடுக்கிறது என்று அர்த்தம். இது உதாரணம்தான்.

நடைமுறையில், இந்திய விவசாயிகளுக்கு, அவர்கள் பயன்படுத்தும் உர விலையில் மானியம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் சந்தை விலையைவிட, மிகக்குறைந்த விலையில் விவசாயிகள் உரம் வாங்கிப் பயன்படுத்த முடியும். இதற்காக இந்திய அரசு பட்ஜெட்டில் ஒரு பெரும் தொகையை வழங்குகிறது. 2017 –- 18ம் நிதியாண்டில், மானியத்துக்காக அரசு செலவிடும் தொகை ரூ. 2.40 லட்சம் கோடி. அதில், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மானியத்திற்கு ரூ.1,45,338 கோடியும், உர மானியத்திற்கு ரூ.70,000 கோடியும், பெட்ரோல் மானியத்திற்கு ரூ.25,000 கோடியும் அடக்கம். 16,076 கோடி ரூபாய் சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம். மீதம் மண்ணெண்ணைக்கான மானியம். இன்னும் நம் மருத்துவ, கல்விச் செலவுகளுக்காகவும் அரசு மானியம் வழங்கி வருகிறது.


ஏன் மானியம்?

மானியத்தால், பல நன்மைகள் உள்ளன. உதாரணத்துக்கு, சோலார் பேனல்களுக்கு வழங்கப்படும் மானியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் சூரிய மின்சக்தியை பயன்படுத்த முடிவு செய்கிறீர்கள். இதனால், மின்சார செலவைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்ய எண்ணுகிறீர்கள். ஆனால், சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க, சோலார் தகடுகளை உங்கள் வீட்டில் நிறுவ வேண்டும். அதற்கு 1 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய பலரும் தயக்கம் காட்டுவார்கள். முதலீடு செய்தால், நன்மைகள் அதிகம் என்கிற நிலையில், அரசு உங்களை ஆர்வப்படுத்த 30 சதவீத மானியம் என்று அறிவிக்கிறது. அதாவது முப்பதாயிரம் தருவதாக அரசு சொன்னால், சூரிய மின்சாரத் தகடுகளை மக்கள் அதிகளவில் நிறுவ ஆர்வம் காட்டத் தொடங்குவார்கள் அல்லவா? இதுதான், மானியத்தின் நன்மை.

அதேபோல், அண்டை நாடுகளின் போட்டியைச் சமாளிக்கவும் மானியம் வழங்கப்படும். உதாரணத்தக்கு நம் எல்.ஆர்.ஏ. பருத்தி ரகம் ஒரு குவிண்டால் சராசரியாக 6000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே நேரம் சீன நாட்டில் ஒரு குவிண்டால் பஞ்சு, 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டால், வியாபாரிகள் எதை வாங்குவார்கள்? சீனப் பஞ்சு அளவுக்கு விலையைக் குறைத்து விற்பனை செய்தால், உள்ளூர் விவசாயிகள் நஷ்டம் அடைவார்கள். இதனால், பருத்தி விவசாயம் நலிவடையும். இதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு அரசு 2 ஆயிரம் ரூபாயை மானிமாக வழங்கும். அப்போது, சந்தையில் 4 ஆயிரம் ரூபாய்க்கு பஞ்சு மூட்டை விற்பனை செய்து போட்டியைச் சமாளிக்க முடியும்.


மானியத்தின் குறைகள்

மானியம் வழங்கப்படும்போது, அது உரியவர்களுக்கு போய்ச் சேர்வதில்லை என்று பொருளாதார வல்லுனர்கள் குறை கூறுகின்றனர். இதில் ஓரளவுக்கு உண்மை உள்ளது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அதில் ஏழைகளும் இருப்பார்கள், வசதிபடைத்தவர்களும் இருப்பார்கள். மானியங்கள் வழங்கப்படுவது, நலிவடைந்தவர்களைக் காப்பாற்றி கரை சேர்க்கத்தான். ஆனால், வசதி படைத்தவர்களும் மானிய உதவியைப் பெற்றுக் கொள்ளும்போது, அரசுக்கு இருப்பதைக் காட்டிலும் கூடுதல் சுமை ஏற்படும். இது முதல் பிரச்னை.

இரண்டாவது, ஒரு துறைக்கு ஆகும் கூடுதல் செலவு, மற்ற துறைகளுக்குக் கிடைக்க வேண்டிய கவனிப்பைக் கிடைக்காமல் செய்துவிடும். உதாரணத்துக்கு விவசாயத்துக்கு அரசு 70 ஆயிரம் கோடி ரூபாயை உர மானியமாக வழங்கும்போது, அது எவ்வளவு பெரிய தொகை என்று கணக்குப் போட்டு பாருங்கள். அரசு கஜானாவில் இருந்து இவ்வளவு பெரிய தொகை காலியாகும்போது, மற்ற துறைகளுக்கு அரசால் உதவி செய்ய முடியாது. இதனால், சீரான வளர்ச்சி இன்றி, துறைகளுக்கிடையே சமநிலைமையின்மை ஏற்படும்.

வேண்டுமா வேண்டாமா?

மானியங்களில் உள்ள குறைகளைப் பார்த்துவிட்டு, மானியங்களையே அறவே நிறுத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால், இந்தியா போன்று ஏறத்தாழ 35 சதவீதம் பேருக்கும் மேல் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் நிலையில், மானிய ரத்து சரியான முடிவாக இருக்காது. மானியங்கள் தரப்படுவது என்பதே சாமானிய, அடித்தட்டு, கீழ் நடுத்தர வர்க்கத்தினரால் அந்த விலை கொடுத்து அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாது என்பதால்தான். அப்படி இருக்கும்போது மானியங்களை முற்றிலுமாக அகற்றுவது சரியாக இருக்க முடியாது. வசதி படைத்தவர்களுக்கு மானியங்கள் தரப்படக் கூடாதுதான். மானியங்கள் முறைகேடுகளுக்கு வழிவகுக்கக் கூடாதுதான். அந்தக் குறையைச் சரிக்கட்டி, உரியவர்களுக்குக் கிடைக்கச்செய்ய முயற்சி எடுக்க வேண்டுமே தவிர, மானியங்கள் முற்றிலுமாக அகற்றப்படுவதும் கூடாது. அப்படிச் செய்வது, அடித்தட்டு, நடுத்தரவர்க்கத்தினரின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும்

– ரோஷன் செல்வரத்தினம்

Comments