நேரடி, மறைமுக வரிகள்
அரசு பெறும் வரி வருவாய்களில் நேரடி வரி (Direct Tax) , மறைமுக வரி (Indirect Tax) என இருவகைகள் உள்ளது. அரசுக்கு நேரடியாக செலுத்தப்படுகிற, பெருநிறுவன வருமான வரி (Corporate Income Tax), தனிநபர் வருமான வரி (Personal Income Tax), சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும்.
பொருள்களை உற்பத்தி செய்யும்போது செலுத்துகின்ற கலால் வரி (Excise Duty), இறக்குமதி / ஏற்றுமதி செய்யும்போது செலுத்தப்படும் சுங்க வரி (Customs Duty), பொருள்களை வாங்கும் போது செலுத்துகின்ற மதிப்பு கூட்டு வரி, சேவை வரி (Service Tax) போன்றவை மறைமுக வரிகளாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது இவையெல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜி.எஸ்.டி. வரியாக (சரக்கு மற்றும் சேவைகள் வரி) வசூலிக்கப்படுகிறது. வாட், மத்திய விற்பனைவரி, கலால் வரி, சேவை வரி, செஸ்கள் என்று பலப் பெயர்களில் வசூலிக்கப்பட்டு வந்த வரிகள், மொத்தமாக ஜி.எஸ்.டிக்குள் அடங்கிவிடும். மத்திய அரசின் மறைமுக வரிப் பட்டியலில் உள்ள சுங்க வரி ஜி.எஸ்.டியில் இணைக்கப்படவில்லை.
நேரடி வரியில், சம்பந்தப்பட்டவரிடம் இருந்து மட்டும்தான் வரி வசூல் செய்யப்படும். மறைமுகமாக மற்றவர்கள் மீது சுமத்த முடியாது. ஒருவரின் வருமானம் அதிகமாகும்போது அவர் அதிகமான வரியையும், குறைவான வருமானம் உள்ளவர் அதற்கேற்ற வரியையும் செலுத்துவார். பொருளாதார சக்திக்கேற்றவாறு, ஒருவரிடமிருந்து வரிவசூல் செய்யப்படும்.
ஆனால், மறைமுக வரியைப் பொறுத்தவரை அதற்கு நேர்மாறானது. அரசால் வரி விதிக்கப்படும் ஒருவராகவும், அந்தச் சுமையை தாங்குபவர் வேறு ஒருவராக இருப்பார். அதாவது, உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் மீது, ஜி.எஸ்.டி. உயர்த்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இதை அவர் சுமக்க மாட்டார். மாறாக, நுகர்வோர் தலையில் சுமத்திவிடுவார். உதாரணத்துக்கு, ஹோட்டலில் நாம் சாப்பிடும் உணவு பில்களில், தனியே ஜி.எஸ்.டி. வரி என்று போடப்பட்டிருப்பதை பார்க்கலாம். மறைமுக வரி, நுகர்வோர் வாங்கும் பொருளின் விலையைக் கூடுதலாக்குகின்றது.
மறைமுக வரிகளை பொறுத்தவரை ஏழை பணக்காரர் எல்லோரும் ஒரே விதமான வரிகளை செலுத்துவார்கள். நம் நாட்டின் மொத்த வரி வருவாயில் 35 சதவீதம் நேர்முக வரிகளாகவும், 65 சதவீதம் மறைமுக வரிகளாகவும் பெறப்பட்டுள்ளன.
எது அதிகம் வேண்டும்?
நேர்முக வரியில்தான், திறனுக்கேற்ப வரிவிகிதங்களை மாற்றி அமைக்க முடியும் என்பதால், பொருளாதார மறுபகிர்வுக்கு நேர்முக வரிகளை அதிகம் பயன்படுத்தவேண்டும், அதேசமயம், இந்த நேர்முக வரிகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாத வண்ணம் வரிக்கொள்கைகளை வடிவமைக்க வேண்டியதும் மிக முக்கியம். அதிகமாக உழைத்து பொருள் ஈட்டுவோர் மீது அதிக வரிச் சுமையை ஏற்றிக்கொண்டே போவதும், அவர் மேலும் உழைப்பதற்கான ஊக்கம் இல்லாமலே போகும்.

Comments
Post a Comment