புறவிளைவு : கணக்கில் வராத கட்டணம்



புறவிளைவு (Externality) என்பது முக்கிய பொருளியல் கருத்தாகும். உற்பத்தியிலோ, நுகர்விலோ சம்பந்தப்படாத மூன்றாவது நபருக்கு ஏற்படும் செலவையோ நன்மையையோ புறவிளைவு எனக் குறிப்பிடுகிறோம். இது இரண்டு வகைப்படும். முதலாவது, நேர்மறை புறவிளைவு. இரண்டாவது, எதிர்மறை புறவிளைவு.

எதிர்மறை புறவிளைவு (Negative Externality)

பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை எடுத்துக்கொள்வோம். மூலப்பொருள், மின்சாரம், இயந்திரத் தேய்மானம், இடவாடகை, தொழிலாளர் ஊதியம் இவை தான், பிளாஸ்டிக் பைகளின் உற்பத்திச் செலவில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்தச் செலவு போக மீதம் கிடைப்பது லாபம்.

இப்படித்தான், நாம் உற்பத்தியையோ, நுகர்வையோ கணக்கிடுவோம். ஆனால், பிளாஸ்டிக் பை உற்பத்தியோடு சம்பந்தப்படாத மூன்றாம் நபருக்கும் சில செலவுகள் ஏற்படுகின்றன.

உதாரணமாக, சாலையில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளைத் தின்று கால்நடைகள் உயிரிழப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்பு. பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு அருகில் வசிப்போருக்கு ஏற்படுகிற உடல்நல பாதிப்புகள். பொதுவெளியில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளைத் துப்புரவு செய்ய, அரசு செய்யும் கூடுதல் செலவு. பிளாஸ்டிக் பைகள், மழை நீர் பூமிக்குள் இறங்குவதைத் தடுப்பதால் குறையும் நிலத்தடி நீர் என்பன போன்ற பாதிப்புகளைக் கூறலாம்.

இந்த வகை விளைவுகளுக்கானச் செலவை, உற்பத்தியாளரோ, நுகர்வோரோ ஏற்பதில்லை. இப்படி உற்பத்தியிலோ, நுகர்விலோ சம்பந்தப்படாத மூன்றாம் நபருக்கு ஏற்படும் விளைவுகள் தான், எதிர்மறை புறவிளைவுகள்.

தனிநபருக்கு கிடைக்கும் லாபத்துக்கும், கூட்டாகச் சமூகத்துக்குக் கிடைக்கும் லாபத்துக்கும் பெரும் வேறுபாடு உண்டு என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

கூட்டு விளைவு= தனிநபர் லாபம் + புறவிளைவு

கூட்டு விளைவை விட தனிநபர் லாபம் அதிகமாக இருந்தால், அது எதிர்மறை புறவிளைவு. இப்படியான நிலையில், எதிர்மறை புறவிளைவுகளைக் கட்டுப்படுத்த அரசு தலையிடுவது அவசியமாகிறது. இதனடிப்படையில்தான், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பொருள் உற்பத்திக்கு, கூடுதல் வரிகளை அரசுகள் விதிக்கின்றன.

நேர்மறை புறவிளைவு (Positive Externality)

நேர்மறை புறவிளைவுகள், தனிநலனை விட சமூகத்துக்கு அதிக நன்மையைப் பெற்றுத்தரும். உதாரணத்துக்கு அறிவியல் ஆய்வு நிறுவனம் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். அந்த நிறுவனம் லட்சக்கணக்கில் செலவு செய்து டெங்குவுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார்கள் என்று கொள்வோம். இப்போது, மருந்தை விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் லாபம் ஈட்டுவார்கள்.

அதேசமயம், சமூகத்துக்குக் கிடைக்கும் லாபம் அதை விட அதிகமாக இருக்கும் அல்லவா? உயிரிழப்புகள் தடுக்கப்படும். நோய் காரணமாக முடங்கிக்கிடந்த மனித ஆற்றல், மீண்டும் செயல்படத் தொடங்கும்.

இரண்டாவது உதாரணம், கூகுள் மேப் செயலியை எடுத்துக்கொள்ளுங்கள். கூகுள் நிறுவனம் மேப் சேவை வழங்கி லாபம் அடைந்தாலும், தொழில்நுட்ப பரவலால் போக்குவரத்து எளிதாகிறதல்லவா? வழி தெரியாவிட்டாலும், கூகுள் மேப்பை நம்பி எத்தனை ஓட்டுனர்களுக்கு வேலை தரப்படுகிறது!

இதனால், எவ்வளவு நேரம், அலைச்சல் மிச்சம். இதில், பொதுமக்கள் மிக அதிக பயனடைவதால், இதை நேர்மறை புறவிளைவுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மூன்றாவது உதாரணம் கல்வி. நல்ல கல்வி மூலம் திறனுள்ள தொழிலாளர்கள் ஏராளமானோர் உருவாவார்கள். திறன்மிக்க தொழிலாளர்கள் இருந்தால், உற்பத்தி கூடி, அந்தச் சமூகமே பயன்பெறும். ஆனால், கல்விக்கூடத்தை நடத்தும் தனியார் ஒருவர், தன்னுடைய லாபத்தைத்தான் முதலில் பார்ப்பார். அதன்படி, மட்டுமே கல்வி கற்க முடியும் என்றாகும்.

இதனால், நேர்மறை புறவிளைவு ஏற்படுவதில் சுணக்கம் உண்டாகும். இதை விரைவுபடுத்த அரசின் தலையீடு அவசியமாகிறது. கல்விக்கடன், கல்வி உதவி, ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு போன்றவை இதனடிப்படையில் தான் அரசுகள் வழங்குகின்றன.

– ரோஷன் செல்வரத்தினம்

Comments