பேரம் பேசுதல் நன்று - நுகர்வோர் விழிப்புணர்வு



பொருட்களை வாங்கி விற்கும் சந்தை அமைப்பு முறையில், நுகர்வோரை எப்படிப் பலப்படுத்துவது, காப்பது என்பதைப் பற்றி ஆராய்வதே நுகர்வோர் கல்வியின் நோக்கம். நுகர்வோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இவை:

1) சிக்கலான அங்காடி முறை

இன்றைய அங்காடி அமைப்பும் செயற்படும் முறையும் சிக்கலானதாக இருக்கிறது. ஒரே பொருள், பல்வேறு தரங்களில் கிடைக்கின்றன. அவற்றின் விலையிலும் பெரும் வேறுபாடு. சில பொருட்கள் அதன் பிராண்டுக்காக மட்டும் விலை கூடுதலாக இருக்கும். ஆனால், அதே தரம் கொண்ட பொருள், அதை விட பலமடங்கு விலை குறைவாக கிடைக்கும்.

பொருட்களின் சப்ளை திடீரென கூடவோ குறையவோ செய்யலாம். எதை, எப்போது, எங்கே வாங்குவது என்ற திட்டமிடல் நுகர்வோருக்குத் தேவை.

2) சரியான பயன்பாடு: - தொழில்நுட்பம்

தொழில்நுட்ப வளர்ச்சியால், நாள்தோறும் புதுப்புது பொருட்கள் அங்காடிக்கு வருகின்றன. அவற்றைக் கையாளும் அறிவு நுகர்வோருக்கு அவசியம். உதாரணத்துக்கு, மைக்ரோவேவ் ஓவன் வாங்கிவிட்டு, அதை முறையாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் விபரீதத்தில் முடிந்துவிடும். அதனால், ஒரு பொருளை வாங்கும்போதே, அதன் விற்பனைக்குப் பின்னர் அதன் சேவை, தொழில்நுட்பக் கையேடு, பொறியாளர்களின் உதவி ஆகியவை வழங்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பல பொருட்களை மாற்றித் தருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கான வாரண்டி, கேரண்டி ஆகியவை அவசியம். தொடர்ச்சியான சேவை வழங்க, ஏ.எம்.சி. வாய்ப்பு உண்டா என்பதையும் கேட்கவேண்டும்.

3) தற்காப்பு நடவடிக்கை

‘குறைந்த விலை - 90 சதவீத அதிரடித் தள்ளுபடி’, ‘ஒன்று வாங்கினால், மூன்று இலவசம்’ போன்ற விளம்பரங்களை தினந்தினம் பார்க்கலாம். பெரும்பாலும் இவை மோசடிகளாக இருக்கின்றன. ஒன்று தரமற்ற பொருட்கள் இப்படி தள்ளிவிடப் படலாம். அல்லது உண்மையிலேயே ‘சேல்’ என்ற முறையில், சரக்குகளைத் தீர்ப்பதற்கான வழிமுறையாக இருக்கலாம். போலிப் பொருட்களை இனங்கண்டு கொள்ளும் அளவுக்கு அறிவு பெற்றிருப்பது அவசியம்.

4) பேரம் பேசும் திறன்

பேரம் பேசுதல் இன்று நாகரிகக் குறைவாகப் பார்க்கப்படுகிறது. பேரம் பேசாத நுகர்வோர் கூடுதல் விலை கொடுத்து பொருட்களை வாங்கி ஏமாறுகின்றனர்.

எனவே, பொருட்களின் அளிப்பு (Supply), மதிப்பு, தரம், சந்தை விலை நிலவரம் போன்றவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், திறமையாகப் பேரம் பேசி, சரியான விலையில் வாங்கி, நிறைவான பயன்பாட்டைப் பெற முடியும்.

5) நுகர்வோர் சுதந்திரம்

நுகர்வோருக்கு சில அடிப்படையான உரிமைகளுள் ஒன்று, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பொருட்களைத் தேர்ந்தெடுப்பதாகும். வாங்கிய பொருளை மாற்றிக்கொள்வதற்கோ, பொருளே பிடிக்கவில்லை என்றால் அதை வாங்காமல் இருப்பதற்கோ நுகர்வோருக்கு உரிமை உண்டு. இந்த உரிமையுணர்வு, நுகர்வோருக்கு மிகவும் அவசியம்.

6) கடன் முறைகள்

மாதத் தவணை (EMI) மற்றும் கடன்பெற்று பொருட்களை வாங்க நுகர்வோருக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவற்றைப் பற்றி ஓரளவுக்கேனும் நுகர்வோர் அறிந்துவைத்திருக்க வேண்டும். கடனுக்கும், தவணைக்கும் பொருட்களை வாங்குவதில் சில நன்மைகள் உண்டு என்றாலும், அதில் பல குறைகளும் உள்ளன. மாதத் தவணை குறித்த காலக்கெடுவுக்குள் கட்டத் தவறினால் விதிக்கப்படும் அபராதத் தொகை, முழுமையாக கட்டி முடிக்கும் போது நாம் செலவிடும் தொகையை கணக்கிடத் தெரிய வேண்டும்.

7) பொருட்களைப் பராமரிக்க

நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருட்களைப் பாதுகாக்கத் தெரிந்திருக்க வேண்டும். அரிசி இத்தனை நாட்கள் வரை கெட்டுப்போகாமல் வைக்கலாம், தக்காளியை பிரிட்ஜில் வைத்து இத்தனை நாட்கள் பாதுகாக்கலாம், பைக்கை இப்படிப் பராமரித்தால் ரிப்பேர் ஆவதைத் தடுக்கலாம் என்றெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், நாம் வாங்கும் பொருட்கள் வீணாகாமல் இருக்கும்; மிகுதியான பயன்பாட்டைப் பெற முடியும்.

8) பாதுகாப்புச் சட்டங்கள்

நுகர்வோரைப் பாதுகாக்க அரசு சில சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. காலாவதியான பொருளை விற்பதைத் தடுக்க, கலப்படப் பொருளைக் கொடுத்து ஏமாற்றுவதைத் தடுக்க என்பது போன்ற சட்டங்கள் இதில் அடக்கம். இவ்வகையான மோசடிகள், ஏமாற்றால் பாதிக்கப்பட்டோர் தங்களுக்கு நியாயம் கிடைக்க, இச்சட்டங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பது அவசியம்.

↔-– சிவசக்தி

Comments